தமிழ்நாடு

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

“மதுரைக்கு எய்மஸ் மருத்துவமனை திட்டத்தை அறிவித்துவிட்டு- அந்த திட்டத்தையும் ஏழு ஆண்டுகளாக பா.ஜ.க பம்மாத்து காட்டிக் கொண்டு இருக்கிறது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“கழக ஆட்சி மக்களாட்சியாக, மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்; சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போம்; சட்ட விரோதச் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதில் இந்த ஸ்டாலின் எப்போதும் பின்வாங்க மாட்டான்; மக்கள் அமைதியாக வாழ்வதற்கான உத்தரவாதத்தை இந்த மதுரை மண்ணில் இருந்து மக்களுக்கு வழங்குகிறேன்”, “ஜப்பான் நாடு நிதி தர மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ மதுரைக்கு எய்மஸ் மருத்துவமனை வராதா?”

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை

இன்று (17-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மதுரை யானைமலை, ஒத்தக்கடைப் பகுதியில் நடைபெற்ற, மதுரை மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

முன்னதாக, மதுரை சிம்மக்கல்லில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உருவச்சிலையைத் திறந்துவைத்து கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலையை இந்த மதுரை மாநகரில் நான் திறந்து வைத்திருக்கிறேன். தந்தையின் சிலையை அவருடைய மகன் ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறான். என்ன பேசுவது என்று தெரியாமல் நான் நெகிழ்ந்த நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

இந்த சிலை இங்கு இங்கே நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் - வேலு அவர்கள் குறிப்பிட்டு காட்டியது போல, நம்முடைய தளபதி அவர்கள் சுட்டிக்காட்டியது போல - இதற்குப் பல இடையூறுகள் இருந்தன.

ஆனால் அந்த இடையூறுகளை எல்லாம் மீறி, தடைகளை எல்லாம் கடந்து, திறந்து வைத்திருக்க முடியுமா என்ற ஒரு கேள்விக்குறி இருந்த நிலையில் முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். எப்படி தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடத்தை நீதிமன்றத்தின் மூலமாக பெற்றோமோ, அதேபோல இந்த சிலையும் இந்த இடத்தில் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இதை நிறுவி இருக்கிறோம்.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. முதன்முதலில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திறந்துவைக்கப்பட்டது. இரண்டாவதாக அவருடைய மூத்த பிள்ளையாக விளங்கிக் கொண்டிருக்கும் முரசொலி அலுவலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுடைய குருகுலமாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈரோட்டில் திறந்துவைக்கப்பட்டது. அதற்கு பின்னால் அண்ணன் - அண்ணன் என்று கடைசிவரை, கலைஞர் அவர்கள் தன் உயிர் மூச்சு இருக்கிற வரையில் முழங்கிக்கொண்டிருந்த தன்னுடைய அண்ணா பிறந்த மண்ணில் காஞ்சிபுரத்தில் திறந்து வைக்கப்பட்டது. அதற்குப்பின்னால் ஓரிரு இடங்களில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அவை எல்லாம் தனிப்பட்ட முறையில், நமக்கு சொந்தமான இடங்களில் திறந்து வைத்தோம். ஆனால் மதுரையில் எப்படியாவது வைத்திட வேண்டும் என்று கருதி அரசு எவ்வளவோ தடை போட்டாலும் நாம் நீதிமன்றத்தை நாடினோம். நியாயம் கேட்டோம். அந்த நியாயம் நமக்கு கிடைத்திருக்கிறது.

எப்படி தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடத்திற்கு நியாயம் கிடைத்ததோ, அதேபோல இந்த மதுரையில் அவரது சிலை அமைவதற்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

அதற்கு நமது கழக வழக்கறிஞர்கள், கழகத்தின் முன்னோடிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இந்த சிலையை எப்படியாவது இங்கு நிறுவிட வேண்டும் என்று முடிவெடுத்து, சட்டப்போராட்டம் நடத்தி அந்தப் பணியை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அதற்காக நான் தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை வழக்கறிஞர்களுக்கும், கழக முன்னோடிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல் இந்த சிலை அமைப்பை உருவாக்கிய தீனதயாளன் அவர்கள் கலைஞருக்கு மிகவும் பிடித்தவர். தலைவர் கலைஞர் அவர்கள், அண்ணா அவர்களுடைய சிலைகளை எல்லாம் தீனதயாளன் மூலமாக தான் செய்திருக்கிறார். எனவே கலைஞர் சொல்லி சிலை செய்த தீனதயாளன் அவர்கள், கலைஞருடைய சிலையையும் செய்திருக்கிறார் என்பது, உள்ளபடியே வரலாற்றில் பதிவாகும் செய்தியாக அமைந்திருக்கிறது. எனவே தீனதயாளன் அவர்களுக்கும் நன்றி சொல்கிறேன்.

இந்த சிலை கட்டமைப்பை உருவாக்கியிருக்கும் பொறியாளர் மணிகண்டன் அவருக்கும் நான் நன்றி சொல்கிறேன். இங்கிருக்கும் மாவட்டக் கழகத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள், முனைப்போடு இந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் நம்முடைய கழகத்தின் உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர், திருவண்ணாமலை மாவட்டக் கழகச் செயலாளர் வேலு அவர்கள் தானாக முன்வந்து, தானே முன்னின்று இந்த பணி முடிகிற வரையில் எனக்கு உணவில்லை, ஓய்வில்லை என்ற நிலையில் இருந்து இந்த பணியை அவர் முடித்துத் தந்திருக்கிறார்.

அவருக்கும் இந்த நேரத்தில் நான் என்னுடைய இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எழுதப்பட்டிருக்கும்,

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி!

என்ற 5 முழக்கங்களை நமக்கு தந்து விட்டு சென்றிருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த வழியில் நாமும் நின்று பாடுபடுவோம் பணியாற்றுவோம். இன்னும் மூன்றே மாதங்களில் கலைஞருடைய கனவு தமிழகத்தில் நிறைவேறப்போகிறது. நிறைவேறுவதற்கு அவருடைய சிலையின் கீழ் நின்று நாம் அத்தனை பேரும் உறுதி எடுப்போம்! சபதமேற்போம்! விடைபெறுகிறேன். நன்றி… வணக்கம்…

இவ்வாறு சிலைத் திறப்பு விழாவில் கழகத் தலைவர் அவர்கள் பேசினார்.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

இதையடுத்து மதுரை ஒத்தக்கடை – யானைமலை பகுதியில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

வாசு என்பவர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

20 வருடங்களாக வாசு அவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருந்து பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். அதற்காக முதலில் அவருக்கு நாம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டும். பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள். இப்போதும் அவர் கோரிக்கை என்னவென்றால் தனக்கு அது வேண்டும் - இது வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. கப்பலூர் டோல்கேட்டால் மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கப்பலூர் டோல்கேட்டால் திருமங்கலம் மக்கள் மதுரைக்கு செல்வதற்கு அதிக நேரமாகிக் கொண்டிருக்கிறது. கஷ்டமாக இருக்கிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இப்போது பேசும் போதும் சொன்னார்கள். இந்த பகுதியில் இது ஒரு முக்கியமான பிரச்சினை என்பது எனக்கு தெரியும். இந்த டோல்கேட் பிரச்சினை இங்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டின் தலைநகராக இருக்கும் சென்னையிலும் இது பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.

மாநகராட்சிகளுக்குள்ளேயே பல டோல்கேட் அமைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்முடைய கழக எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடத்தில் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் தான் நாங்கள் முடிவெடுப்போம். சென்னைக்கு உள்ளே இருக்கும் டோல்கேட் பற்றி நீங்கள் உங்கள் முதலமைச்சரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து சோளிங்கநல்லூர் டோல்கேட் பகுதியில் இருக்கும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அப்போது அரசு அதைப்பற்றி காது கொடுத்து கேட்கவில்லை. அதற்கு பிறகு நம்முடைய தயாநிதிமாறன் எம்.பி. அவர்கள், முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, டிசம்பர் மாதத்தில் ‘டோன்ட் வாண்ட் டோல்கேட்‘ என்று சொல்லி அந்த பகுதியில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். நம்முடைய முன்னாள் மேயர் - தென்சென்னை மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியம், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. எல்லோரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இந்த கப்பலூர் டோல்கேட்டை பொறுத்தவரையில், நகராட்சிகளின் எல்லையில் இவ்வாறு டோல்கேட் அமைக்க கூடாது என்ற அறிவுரையைக் கூடப் பின்பற்றாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கூட இரு மடங்கு கட்டணம் வசூலித்ததைத் தட்டிக்கேட்ட ஐயப்ப பக்தர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் மோசமாக தாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய மாலைகளை அறுத்திருக்கிறார்கள். இதெல்லாம் தொலைக்காட்சிகளில் செய்தியாக வந்தது. தோழர் வாசு சொல்வதில் இருந்து நோயாளிகள் தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத, உயிர் போகின்ற அளவிற்கு மிகப் பெரிய தொல்லையாக இந்த டோல்கேட் பிரச்சினை இருக்கிறது என்பதை நானும் புரிந்து கொண்டேன். நிச்சயமாக இது தொடர்பாக தீவிரமான போராட்டங்களை தி.மு.க. முன்னெடுக்கும். அப்படியும் இந்த அரசுக்கு புத்தி வரவில்லை என்றால் 3 மாதத்தில் நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இதற்கு ஒரு நல்ல முடிவு எடுப்போம் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

அஜித் குமார் என்பவர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

புகையிலை மற்றும் மது, இதை அனுமதிக்காத ஒரு இனிய ஊர் தேனூர். அந்த ஊரைச் சேர்ந்த அஜித்குமார், தாங்கள் இப்போது இவ்வளவு கட்டுப்பாடாக இவ்வளவு ஒழுங்காக நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்கள் ஊரில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்று மிகவும் வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். நேற்றைக்கு கூட நான் சென்னையில் இருந்து வரும்போது ஒரு போஸ்டர் பார்த்தேன்.

அதாவது 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு ‘மினி கிளினிக்’ திறந்த முதலமைச்சருக்கு நன்றி என்று அவர்களது கட்சிக்காரர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். 2 கிலோ மீட்டருக்கு ஒரு ‘மினி கிளினிக்’ இருந்து, அது ஒழுங்காக செயல்படவும் செய்தால் அஜித்குமார் இங்கு இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டார். அதுதான் உண்மை. அதாவது இப்போது இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பேணிப் பாதுகாத்தாலே போதும். அதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அதற்கு வேண்டிய பணியாளர்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தாலே அது ஒழுங்காக நடக்கும். அதை செய்யாமல் ‘மினி கிளினிக்‘ என்று ஒரு ஆரம்பித்து, பழைய பில்டிங்கிற்கு பச்சை பெயிண்ட் அடித்து, இதுதான் ‘மினி கிளினிக்’ என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கவுண்டமணி – செந்திலின் ‘அதுதான் இது, இதுதான் அது’ என்ற வாழைப்பழ காமெடி போன்ற ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முக்கியமாக இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எங்கெங்கு இருக்கிறதோ அவற்றை எல்லாம் புதுப்பித்து, முறைப்படுத்தி, இல்லாத இடங்களிலும் அதை உருவாக்கி நிச்சயமாக ஒரு நிரந்தர தீர்வு காணப்படும் என்பதை நாம் நம்முடைய சகோதரர் அஜித் குமார் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவ்வாறு வரும்போது இந்த தேனூரிலும் அந்தப் பிரச்சினை நிச்சயமாக தீரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பொதுமக்களின் கோரிக்கைகளுக்குக் கழகத் தலைவர் அவர்கள் பதிலளித்துப் பேசினார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை விட இன்று நடக்கும் நிகழ்ச்சியானது மிகமிக முக்கியமானது. இந்த மேடையில் அமர்ந்திருக்கும் போது வழக்கத்துக்கு மாறாக நான் அதிகமான உணர்ச்சிமயமாக இருந்தேன். இருக்கிறேன்.

சிம்மக்கல்லில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு இங்கே வந்ததால் ஏற்பட்ட உணர்ச்சியும், மலர்ச்சியும் தான் இதற்குக் காரணம். நமக்கு உயிராக இருந்தவர் இன்று சிலையாக இருக்கிறார். நமக்கு உணர்வாக இருந்தவர் இன்று சிலையாக இருக்கிறார். நமக்கு ஊக்கமாக இருந்தவர் இன்று சிலையாக இருக்கிறார். அந்தச் சிலையை பார்க்கும் போது உயிர்ச்சிலையாக கலைஞர் அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். அவர் இன்னமும் நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார். நம்மை என்றால் நம்மைப் போன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்ச்சமுதாயத்தையே வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்.

அவருக்குப் பிடித்த மதுரை மண்ணில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு வந்து கலைஞர் இறங்குகிறார் என்றால் மதுரை மண்ணில் ஒரு புதிய உதயசூரியன் உதயமாகிறது என்று அர்த்தம். அந்த நேரத்தில் இந்த மதுரையின் மலையும் கோபுரமும் எதிரொலிக்க, 'தலைவர் கலைஞர் வாழ்க' என்று தொண்டர்கள் எழுப்பும் முழக்கத்தால் தென் மாவட்டமே அதிரும்.

'தலைவர் கலைஞர் வாழ்க' என்ற அத்தகைய முழக்கம் சூழ, இந்த மதுரை மண்ணில் கலைஞரது சிலை திறக்கப்பட்டுள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் திருச்செந்தூரை நோக்கி நீதிகேட்டு நெடும்பயணத்தை மதுரையில் இருந்துதான் தொடங்கினார் நம் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டை தனது அன்பால் அறிவால் ஆண்ட தலைவர் கலைஞர் அவர்கள், மதுரையைத் தனது கால்களால் அளந்தார். அந்த மண்ணில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

1991 ஆம் ஆண்டு இதே மதுரை மண்ணில் தான் திராவிட இயக்கத்தின் பவளவிழா மாநாட்டை தலைவர் கலைஞர் அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். திராவிட மறுமலர்ச்சிக் கருத்தரங்கம் நடத்துவதற்கான வாய்ப்பை அன்றைய தினம் இளைஞரணிக்கு தலைவர் அவர்கள் வழங்கினார்கள். அந்த மாநாட்டில் தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து நான் பேசினேன்.

'அன்பில் அழைக்கிறார் என்று அண்ணா எழுதியதைப் போல பொன். முத்துராமலிங்கம் அழைக்கிறார்' என்று கலைஞர் அவர்கள் எழுதினார்கள். ''கருணாநிதி எந்த அடக்குமுறைக்கும் அஞ்சி நடுங்கும் ஆமையல்ல, அண்ணாவின் தம்பி, பெரியாரின் பிள்ளை, இந்த மண்ணின் மைந்தன், ஆயிரம் மிசாக்களை, லட்சம் தடாக்களையும் இடறி எறியும் ஆற்றல் எங்களுக்கு உண்டு" என்று இதே மதுரை மண்ணில் தான் அன்றைய தினம் கலைஞர் அவர்கள் கொந்தளித்தார்கள்.

ஏழு மைல் நீளத்துக்கு மாபெரும் பேரணியை நாம் நடத்திக் காட்டினோம். மதுரையில் நடப்பதால் இது சித்திரை திருவிழா மட்டுமல்ல, கழக வரலாற்றில் முத்திரைத் திருவிழா என்று கலைஞர் அவர்கள் போற்றிய மாநாடு அது.

1994 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த மண்டல மாநாட்டையும் மறக்க முடியாது. கழக மாநாட்டோடு சேர்ந்து சமூகநீதி மாநாட்டையும் நடத்தினார் கலைஞர் அவர்கள். 'கழகம் கண்ட களங்கள்' என்ற தலைப்பில் நான் பேசினேன். இதே மதுரை வீதியில் வெள்ளுடை தரித்து இளைஞரணியினருக்கு தலைமை தாங்கி ஊர்வலமாக நடந்து வந்தேன். ஒன்பது மணிநேரம் உட்கார்ந்து கழக ஊர்வலத்தை கலைஞர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

''மீன் கொடி பறந்த மண்ணில் கழகக் கொடி பறக்கிறது' என்றும் - 'மாவீரர்கள் திரண்ட மதுரை மாநாடு' என்றும் கலைஞர் அவர்கள் எழுதினார்கள். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதே உணர்ச்சி வசப்படுகிறேன் நான்.

தென்பாண்டி மண்டலத்தின் தலைநகராம் மதுரை மண்ணில் கழகம் வளர்த்த மதுரை முத்து, எஸ்.எஸ். தென்னரசு, தா.கிருஷ்ணன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், காவேரி மணியம், அக்னி ராஜ், தீப்பொறி ஆறுமுகம் ஆகிய முகங்களை நினைத்துப் பார்க்கிறேன். கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்கப்படுகிறது என்று சொன்னால், இவர்களது முகங்களையும் கலைஞர் அவர்களின் முகத்தில் காண்கிறேன்!

1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெள்ளிச்சிம்மாசனம் வழங்கும் விழா நடைபெறுகின்றது. அந்த விழாவில் தந்தை பெரியார் அவர்கள், அந்த மேடையில் முதலமைச்சராக உட்கார்ந்திருக்க கூடிய தலைவர் கலைஞர் அவர்களை, 'இங்கே வா இங்கே வா' என்று கையைப் பிடித்து தான் உட்கார வேண்டிய அந்த வெள்ளி சிம்மாசனத்தில் கலைஞர் அவர்களை உட்கார வைத்து அழகு பார்த்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகின்ற போது, ‘என்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னாள் இந்நாள்’என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார். பெரியாரின் சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்பட்ட கலைஞருக்கு சிம்மக்கல்லில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றிய காரணத்தால் அறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டி, கைவிரலில் கணையாழி அணிவித்தாரே - அந்தக் கணையாழியைக் கூட அவரே கடைக்குச் சென்று அவரே போய் வாங்கி அந்தக் கணையாழியை தலைவர் கலைஞருக்கு அணி விக்கின்ற நேரத்தில் சொன்னாரே - 'என்னுடைய மனைவிக்குக் கூட நகை வாங்க கடைக்குச் சென்று நகை வாங்கியது கிடையாது. உனக்காக நான் வாங்கியிருக்கின்றேன்' என்று சொல்லி அதை அணிவித்து மகிழ்ந்தாரே பேரறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய கலைஞருக்கு மதுரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

'என் தம்பிகள் நான் சொல்வதை செய்து முடிப்பார்கள். ஆனால், தம்பி கருணாநிதி மட்டும் தான் நான் சொல்லாமலேயே செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தவர்' என்று அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களும் தன்னுடைய இறுதி மூச்சு நிற்கின்ற வரையில், கடைசி மூச்சு நிற்கின்ற வரையில் அண்ணா - அண்ணா - அண்ணா என்றுதான் சொல்லிக்கொண் டிருந்தார். அந்த அண்ணாவுக்கு அருகில் ஓய்வெடுக்கும் சட்டப்போராட்டத்தை நடத்தி நாம் அண்ணாவின் தம்பிகள், கலைஞரின் உடன்பிறப்புகள் என்பதை நிரூபித்தோம்.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

கழக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கலைஞர் அவர்கள் விரும்பினார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் அந்த ஆசையை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. இன்னும் மூன்றே மாதங்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் அந்த ஆசையும் நிறைவேறத் தான் போகிறது.

கலைஞர் அவர்கள் உடலால் நம்மை விட்டு மறைந்தாலும் உள்ளத்தால் நம்மை இயக்கிக் கொண்டு இருப்பதால் அவரிடம் நாம் பெற்ற வீரத்தால், அவர் நமக்கு கற்பித்த விவேகத்தால் கழகம் வெற்றி பெற்றது என்ற இலக்கை நாம் அடைவோம். அதற்காகத்தான் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்கள் பயணத்தை நான் தொடங்கி, தொகுதிகள் தோறும் போய் வந்து கொண்டு இருக்கிறேன்!

இந்த மதுரையில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்த மதுரை மண்ணுக்கு ஏராளமான திட்டங்களைக் கொடுத்த ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!

· நகராட்சியாக இருந்த மதுரையை 1971 இல் மாநாகராட்சியாக மாற்றியது யார்? முதலமைச்சர் கலைஞர்!

· மாவட்ட நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டியவர் முதலமைச்சர் அண்ணா. திறந்து வைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

· இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை அமைந்திருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் முதலமைச்சர் கலைஞர்!

· மதுரை சுப்பிரமணியபுரம் மேம்பாலம் கட்டப்பட்டு அதற்கு மதுரை முத்து மேம்பாலம் என்ற பெயர் சூட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

· ஆண்டாள்புரம் பாலத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டியவர் முதலமைச்சர் கலைஞர்.

· மதுரை தெற்குவாசல் இருப்புப்பாதை மேம்பாலம் கட்டப்பட்டு தியாகி என். எம். ஆர். சுப்புராமன் மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

· மானம் காத்த மருதுபாண்டியருக்கு சிலை அமைக்கப்பட்டது!

· தமிழைச் செம்மொழி என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவிய பரிதிமாற்கலைஞருக்கு மணிமண்டபம்

· திராவிட மொழிநூல் ஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணருக்கு மணிமண்டபம்.

· மதுரா கோட்ஸ் மேம்பாலம்,

· ஆனைக்கல் வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம்,

· வைகை ஆற்றின் குறுக்கே 3 தரை பாலங்கள்,

· வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலம்,

· செல்லூர் அருகே தத்தநேரி இருப்புப்பாதை உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை கழக ஆட்சியில் அமைக்கப்பட்டன.

· மதுரை வடபகுதியிலிருந்து 27 கிலோமீட்டர் முதல் ரிங்ரோடு

· மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ,

· மாட்டுத்தாவணியில் வணிக வளாகம் பூமார்க்கெட் சென்ட்ரல் மார்க்கெட்

· மதுரை ரயில் நிலையம் அருகே எல்லீஸ்நகர் மேம்பாலம்.

· மதுரை மத்தியப் பகுதியில் மதுரை அண்ணா பல்கலைக்கழகம்

· இரண்டு பாலிடெக்னிக்குகள்

· வைகை இரண்டாம் குடிநீர் திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம்

· வாடிப்பட்டியில் கைத்தறி ஜவுளி பூங்கா

· இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் திட்டமாக மாறியிருக்கக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழாவை நாம் நடத்தியதும் மதுரையில் தான்!

· மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக 120 கோடி மதிப்பீட்டில் மாற்றினோம். புதிய டெர்மினல் முனைய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி அவை திறந்து வைக்கப்பட்டதும் கழக ஆட்சியில் தான்!

· மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவு புதிய கட்டடத்துக்கு 2007 இல் நான் தான் அடிக்கல் நாட்டி வைத்தேன்.

- மதுரையை வளப்படுத்திய அரசு தான் கழக அரசு. கலைஞரின் அரசு.அடுத்து அமைய இருக்கும் ஆட்சியில் இது போல ஏராளமான திட்டங்களைக் கொண்டு வர இருக்கும் அரசு தான் நம்முடைய கழக அரசு.!

இப்படி எதையாவது சொல்ல முடியுமா அதிமுகவால்?

எய்ம்ஸ் மருத்துவமனையையாவது கொண்டு வந்துவிடுவார்கள் என்று நினைத்தேன். அதிலும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு செய்தது.

அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை.

2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை.

2019 ஜனவரி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்தார் பிரதமர். அடிக்கல் நாட்டினார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை.

“மதுரை AIIMS திட்டத்தை அறிவித்துவிட்டு 7 ஆண்டுகளாக பம்மாத்து காட்டுகிறது மோடி அரசு”: மு.க.ஸ்டாலின் சாடல்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசிதழில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதன்பிறகும் அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. 12 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இது தொடர்பாக நமது நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களுக்கு மத்திய அமைச்சர் தந்திருக்கிற பதிலில்-

ஆந்திராவுக்கு 782 கோடிகள், மகாராஷ்டிராவுக்கு 932 கோடிகள், மேற்கு வங்கத்துக்கு 882 கோடிகள், உத்தரப்பிரதேசத்துக்கு 702 கோடிகள், பஞ்சாப்புக்கு 597 கோடிகள், அஸாம்க்கு 341 கோடிகள், இமாசலபிரதேசத்துக்கு 750 கோடிகள் ஒதுக்கி இருக்கும் மத்திய அரசாங்கம் தமிழகத்துக்கு மொத்தமே 12 கோடிகள் தான் ஒதுக்கி இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

தமிழ்நாட்டில் தான் பாஜகவோ அதன் கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, பிறகு எதற்காக பணம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறாரா?

ஜப்பான் நாட்டில் இருந்து நிதி வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார். அப்படியானால் ஜப்பானிலில் இருந்து நிதி வரும் வரை இந்த திட்டம் கிடப்பில் போடப்படுமா? என்று நம்முடைய பாலு அவர்கள் திருப்பிக் கேட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் கேட்கும் கேள்வி, மதுரை என்பது இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? ஜப்பான் நாடு நிதி தர மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ மதுரைக்கு எய்மஸ் மருத்துவமனை வராதா?

ஒரே ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு- அந்த திட்டத்தையும் ஏழு ஆண்டுகளாக பாஜக பம்மாத்து காட்டிக் கொண்டு இருக்கிறது என்பது தான் வேதனைக்குரியது.

அதேபோல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் மிகப்பெரிய கொள்ளை நடந்து வருவது குறித்து நமது சட்டமன்ற உறுப்பினர்களும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிக்கையாளர்களும் தொடர்ந்து புகார் தந்து வருகிறார்கள்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக வந்த பணத்தை மொத்தமாக கபளீகரம் செய்துள்ளார்கள் மதுரை வட்டாரத்து அதிகாரிகளும் அமைச்சரும், ஆளும்கட்சியினரும் என்ற புகாருக்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை.

சுமார் 1000 கோடி வரைக்கும் மத்திய மாநில நிதியாக இந்த மதுரை மாநகராட்சிக்குள் வந்துள்ளது. இந்த பணத்தை வைத்து முறையான திட்டங்களைச் செய்யாமல் எதைச் செய்தால் கமிஷன் வாங்க முடியுமோ அதைச் செய்துள்ளார்கள்.

மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பாலம் கட்டுவது இல்லை. அப்படி கட்டினால் நில ஆர்ஜிதம் செய்ய நாள் ஆகும். அதனால் உடனடியாக கமிஷன் வாங்க முடியாது. எனவே, தேவையில்லாத, அவசியமில்லாத இடத்தில் பாலம் கட்ட திட்டமிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட மாட்டுத்தாவணி பழ மார்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டியதா கணக்கெழுதி விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் நடந்த போது மதுரை எம்.பி. தோழர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அதிகாரியோ அமைச்சர் செல்லூர் ராஜூவோ சரியான பதில் சொல்லவில்லை!

எங்கே பணி நடக்கிறது, திட்டப்பணிகள் எவ்வளவு என்ற தகவல்கள் கூட அதிகாரிகளிடம் இல்லை. முதலில் ஒரு தொகை சொல்வது, அடுத்து தொகையை மாற்றுவது என்று முறைகேடு நடக்கிறது. பல்பு மாற்றியதில் 21 கோடி முறைகேடு நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடக்கிறது. எந்த ஊரிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட அந்த குழுவில் துணைத் தலைவராக அந்தத் தொகுதி எம்பி-யும், உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பார்கள் என்றும் விதியுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த ஆலோசனைக் குழு கூட வேண்டும் என்பதும் விதி. இந்த கூட்டங்களை நடத்துவது இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது ஸ்மார்ட்டாக ஊழல் செய்யும் திட்டமாக மாறிவிட்டது. இதற்கு அமைச்சர் செல்லூர்ராஜூவும் உதயகுமாரும் உடந்தையாக இருக்கிறார்கள்.

அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் ஆர்.பி. உதயகுமாரும் ஒட்டுமொத்தமாக மதுரையைப் பாழாக்கியவர்கள்.

ஆற்றுத் தண்ணீரை தெர்மகோல் கொண்டு மூடியது முதல் - நமக்கெல்லாம் கொரோனா வராது என்று பொய் சொன்னது வரை முழுக்க முழுக்க காமெடி சேனல் நடத்திக் கொண்டு இருக்கிறார் செல்லூர் ராஜூ.

மதுரையை ரோம், சிட்னி நகரங்களைப் போல ஆக்கப் போவதாகச் சொன்னார் செல்லூர் ராஜூ! சிங்கப்பூர் ஆக்கப் போகிறேன் என்றார் உதயகுமார்!

தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் அங்கு போய் தலைமறைவு ஆகலாமே தவிர, மதுரையை மாற்ற முடியாது!

மதுரையை மாற்றுவதற்கான கூட்டம் தான் இந்தக் கூட்டம்! மதுரை வளர்த்தெடுப்பதற்கான கூட்டம் தான் இந்தக் கூட்டம்! மதுரையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளர்த்தெடுப்போம்!

கழக ஆட்சியானது மக்களாட்சியாக அமையும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிம்மதி தரும் ஆட்சியாக அமையும். சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். சட்ட விரோதச் செயல்பாடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். அதில் நம்பிக்கையோடு இருங்கள். அதில் இந்த ஸ்டாலின் எப்போதும் பின்வாங்க மாட்டான். அமைதியான வாழ்வுக்கான உத்தரவாதத்தை இந்த மதுரை மண்ணில் இருந்து தமிழக மக்களுக்கு வழங்குகிறேன். கழக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories