தமிழ்நாடு

“வேலைவாய்ப்புகளை பறிக்க குறுக்கு வழியில் சதி செய்யும் எடப்பாடி அரசு” : கொந்தளிக்கும் தமிழக இளைஞர்கள்!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மோசமான முயற்சிகளை அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“வேலைவாய்ப்புகளை பறிக்க குறுக்கு வழியில் சதி செய்யும் எடப்பாடி அரசு” : கொந்தளிக்கும் தமிழக இளைஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் மோசமான முயற்சிகளை அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும் மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஏற்கனவே இருந்தது போல 58 ஆக தீர்மானிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவருகிறது. கடந்த டிசம்பர் 2020 இறுதியில் வேலையின்மை விகிதம் 9.15 சதவீதமாகும். இதுவரை வரலாற்றில் இல்லாத உயர்ந்தபட்ச அளவாகும்.

மத்திய, மாநில அரசுகள் கடைபிடித்துவரும் நவீன தாராளமய கொள்கைகள் வேலையின்மை பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் 50,000 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வேலைவாய்ப்புகளை பறிக்க குறுக்கு வழியில் சதி செய்யும் எடப்பாடி அரசு” : கொந்தளிக்கும் தமிழக இளைஞர்கள்!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக என்று சொல்லி மத்திய, மாநில அரசுகளால் அமலாக்கப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கால் பல லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல கோடிப் பேர் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கிற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு துறைகளில் நான்கரை லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசு இப்பணியிடங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், அவுட் சோர்சிங், ஒப்பந்த ஊழியர், தற்காலிக ஊழியர் என்ற அடிப்படையிலேயே புதிய நியமனங்களை மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் நியமனங்களை கைவிட்டு காலமுறை ஊதிய அடிப்படையில் நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது.

Unemployment 
Unemployment 

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லி விட்டு பத்தாண்டு கழித்து இருக்கிற வேலை வாய்ப்பையும் அழிக்கக்கூடிய வேலையை செய்து வருகிறது. இத்தகைய சூழலில், தமிழக அரசு கொரோனா நெருக்கடியை காரணம் சொல்லி 58 ஆக இருந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியது.

தமிழக அரசின் இத்தகைய இளைஞர் விரோத நடவடிக்கையை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கும் மற்றொரு துரோக நடவடிக்கை. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இத்தகைய மோசமான முயற்சிகளை அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும். மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை ஏற்கனவே இருந்த அடிப்படையில் 58 ஆக தீர்மானிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories