தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய வழக்கில் எட்டு ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க பிரமுகருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் கே.வி.கேகுப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பன் தனது மைத்துனர் வைத்தியநாதனின் ஸ்வீட் கடையை அபகரிக்கத் திட்டமிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 2013ஆம் ஆண்டு அவரது மனைவி சிவகாமி தொடர்ந்த வழக்கில் நேற்று பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நில அபகரிப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நேற்று தீர்ப்பு வந்ததை அடுத்து எண்ணூர் போலிஸார் அஞ்சப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.