தமிழ்நாடு

“தொண்டாமுத்தூர் தொகுதியின் 2 பூத்களை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளது ஏன்?” - ஆர்.எஸ்.பாரதி புகார்!

சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையிலான குழு, இன்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

“தொண்டாமுத்தூர் தொகுதியின் 2 பூத்களை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளது ஏன்?” - ஆர்.எஸ்.பாரதி புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையிலான குழு, இன்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க சார்பில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையரிடம் ஏற்கனவே 6 மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை அதற்கு பதில் வரவில்லை. ஆனால் அ.தி.மு.கவின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருகிறது.

இது ஒரு தலைபட்சமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக தி.மு.கவின் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு உத்தரவிட்டார்கள்.

மாதவரம் தொகுதியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு எந்த வித பாதுகாப்பும் இன்றி உள்ளதால் கதவுகள் உடைந்து இயந்திரங்கள் உடைக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில், 522 காவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தக் கூடும் என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அரசுப் பணத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், சட்டப்பிரிவினருடன் இணைந்து தி.மு.க சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். எந்த நேரத்தில் தேர்தல் வைத்தாலும் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது.

அமைச்சர் வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியில், இரண்டு பூத்துகளை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளனர். அதில் உள்நோக்கம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories