தமிழ்நாடு

அதானியின் லாபவெறிக்கு பலியாகப்போகும் சென்னை; காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு

காட்டுப்பள்ளி துறைமுகம் 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போய்விடும். பழவேற்காடு பகுதி கடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அதானியின் லாபவெறிக்கு பலியாகப்போகும் சென்னை; காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எண்ணூர் -பழவேற்காடு மக்கள் வாழ்வாதாரங்கள் பறித்து, சுற்றுச்சூழல் கேடுகளை விளைவிக்கும் அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை என எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

அதில், “சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1,950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.

330 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சிறிய துறைமுகத்தை 6,110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்வதற்காக, சுற்றுசூழல் துறையின் தடை இன்மைச் சான்று கேட்டு, அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஏற்பட இருக்கின்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த, சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை, தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்து இருக்கின்றது.

இத்திட்டத்தின் காரணமாக, சூழலுக்குப் பாதிப்புகள் அதிகமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இத்திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான நிலம் , 1515 ஏக்கர் TIDCO க்கு சொந்தமான தனியார் நிலத்தைக் கையகப்படுத்தி, சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்றிக்கொள்ளத் திட்டம் வகுத்துள்ளனர். அதனால், கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். சரி செய்ய முடியாத சூழல் பாதிப்புகளை உண்டாக்கும்.

இப்பகுதிகள் முழுவதும், சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான கடல் பகுதிகள் ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடல் உணவுகள் அதிகம் கிடைக்கின்றன. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து, ஆபிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிக்குப்பம் உள்ளிட்ட 82 தமிழக ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உவர்நீர் ஏரியான பழவேற்காடு ஏரி, இத்திட்டம் வர இருக்கின்ற காட்டுப்பள்ளி பகுதிக்கு வடக்கில் அமைந்துள்ளது. தெற்கில் எண்ணூர் கழிமுகம், மேற்கில் பக்கிங்காம் கால்வாய் உள்ளதால், இது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக CRZ-1 (critical for maintaining ecosystem of coast) அறிவிக்கப்பட்டுள்ளது, மழைக் காலங்களில் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் தான் “வெள்ள வடிகாலாகச்” செயல்பட்டு சென்னையைக் காக்கின்றன.

ஏற்கனவே, சென்னை காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்தினாலும், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாகவும், கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே, சில கிலோமீட்டர் நீளத்திற்கு இருந்த கடற்கரை, தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கி விட்டது. காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி உள்ள இந்நிலையில், இந்தக் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கின்ற கடற்கரையும் அரிக்கப்பட்டு, கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

ஏற்கனவே எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. 2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்து விட்டன. காட்டுப்பள்ளி துறைமுகம் 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போய்விடும். பழவேற்காடு பகுதிகடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படும். கடல் நீர் உட்புகுதல் மேலும் அதிகரிக்கும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்குப் பாதிக்கும்.

அதானியின் லாபவெறிக்கு பலியாகப்போகும் சென்னை; காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு

கண்மூடித்தனமான தொழிற் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக, ஏற்கனவே எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகள் அதிக சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. காலநிலை மாற்றம், கடல் நீர் மட்ட உயர்வு, கடல் நீர் உட்புகுதல், அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களாலும் (Extreme Climatic Events) சென்னை தொடர்ந்து ஆபத்துகளை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் மேலும் சூழல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கடலும், பழவேற்காடு ஏரியும் சங்கமிக்கும் முகத்துவாரத்தின் வழியாக, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கும்; அடுத்த, ஆறு மணிநேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். கடல் வாழ் உயிரினங்கள், நீர் ஏற்றத்தின் போது, ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இங்கு இயற்கையாக நடக்கும் நிகழ்வு.

இதனால் இப்பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து 160 வகையான மீன்கள், 25 வகையான மிதவை புழுக்கள், பலவகையான மெல்லுடலிகள், வெள்ளை இறால், சிங்கி, கோட்ரால், செமக்கை, வழிம்பு, பூச்சி ஆகிய இறால் வகைகளும், பச்சை கட்டு நண்டு, கோரக்கைகால் நண்டு, முக்கன் நண்டு ஆகியவையும் அதிகளவில் உற்பத்தியாகும் இடமாகத் திகழ்கின்றது.

எண்ணற்ற வலசைப் பறவைகளுக்கும் இயல் பறவை இனங்களுக்கும் வாழிடமாக, பழவேற்காடு திகழ்கின்றது. இங்கு, பூநாரைகள், கூழக்கடாக்கள், கடற்காகங்கள், நாரைகள், கொக்குகள், பல்வேறு வகை வாத்துகள் மற்றும் கழுகுகள் போன்ற நூற்றுகணக்கான வகை பறவை இனங்கள் வாழ்கின்றன.

இப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே இதனால் அழியும். இந்த இயற்கையான அமைப்புகள் ஆரணி-கொற்றலை ஆற்றின் நன்னீர்ப் பகுதிகளில் உவர்நீர் புகாமல் தடுக்கின்றன. இதைச் செயற்கையாக மாற்றுவது சரிசெய்ய முடியாத மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும்.

நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டத்துக்குக் காரணமாக இருக்கும் அதானி குழுமம், விவசாயிகளோடு நில்லாமல் மீனவர்கள் வயிற்றில் அடிப்பதற்கும் முனைப்புக் காட்டி வருகின்றது. சாகர் மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்களை, மோடி தலைமையிலான பாஜக அரசு, தனியாரிடம் ஒப்படைத்து வருகின்றது. அந்த வகையில் அதானி குழுமத்திற்கு முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விழிஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக நிலப்பகுதியில் உள்ள துறைமுகத்தையும் அது சார்ந்த வணிகத்தையும் அதானிக்கு ஒப்படைக்க முனைகின்றார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் அதானி குழுமத்தின் இலாப வெறிக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்துவோம்.

இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. திட்டத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதற்கு அதிக காலம் கொடுக்காததாலும், கொரோனா காலமாக இருப்பதாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது ஆபத்தில் முடிந்துவிடும், அதனால் இந்த மக்கள் கருத்துக் கேட்கும் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கூட்டத்தை நடத்தினால், சுற்றுச்சுசூழல் பாதுகாப்பு ஆர்வலர்களுடன், நானும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories