தமிழ்நாடு

“திமுகவின் கிராம சபைக் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போனதாலேயே தடை அரசாணை” - எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி!

கிராம சபை என்ற பெயரை, மக்கள் கிராம சபை என்று மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளோம். உரிமையை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

“திமுகவின் கிராம சபைக் கூட்டத்தைக் கண்டு மிரண்டு போனதாலேயே தடை அரசாணை” - எடப்பாடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தடை விதித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எடப்பாடி அரசு சுற்றறிக்கை விடுத்திருந்தது.

இதற்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி துறை செயலாளர் அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் பல பிரச்சனைகள் தலைவிரித்தாடும் சூழலில், அதை பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளனர். அதிமுக அரசின் ஊழலை எடுத்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், ஆலோசனை கூட்டம் நடத்தி, கடந்த டிசம்பர் 23 முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடத்துவதாக முடிவெடுத்து கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த 23, 24 ஆகிய இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிராம சபை கூட்டம் மூலம் தி.மு.கழகத்தில் இணைந்தனர். இதை அறிந்த முதல்வர் எடப்பாடி அதை தடுக்கும் நோக்கில் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். கிராம சபைக்கு இயற்றப்பட்ட சட்டத்தில் உள்ள 7 விதிகளை பின்பற்றிதான் திமுகவின் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தி.மு.கவின் கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் அளித்துவரும் அமோக ஆதரவை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு தடை விதித்திருக்கிறார். அவசர உத்தரவை பிறப்பித்த முதல்வருக்கும், உள்ளாட்சி துறை செயலாளருக்கும் தி.மு.க சார்பாக பதில் கொடுத்துள்ளோம். கிராம சபை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என எந்த விதியும் இல்லை.

இருப்பினும், கிராம சபை என்ற பெயரை, மக்கள் கிராம சபை என்று மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளோம். உரிமையை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இதற்கான விளக்கத்தை கடிதமாக கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் திமுக அளித்துள்ளோம்.

இன்று காலை தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை பெயரில், மக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார். எத்தனை தடை சட்டங்களை போட்டாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது.” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories