தமிழ்நாடு

“அரசின் அலட்சியத்தால் காட்டு யானை தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்குக” : மு.க.ஸ்டாலின்

காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அனைவரது குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“அரசின் அலட்சியத்தால் காட்டு யானை தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வழங்குக” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூடலுார் ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலர். ஆனந்தராஜ் நேற்று இரவு 7 மணியளவில் வீடு திரும்பியபோது, அவரது மகன் பிரசாந்த்தை தாக்கிவிட்டு, ஆக்ரோஷத்துடன் வந்த காட்டு யானை இவரையும் தாக்கியது. பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதே பகுதியில் நேற்று முன்தினம் ஒருவரை யானை தாக்கிக் கொன்றது. காட்டு யானைகளால் அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து என்பது அ.தி.மு.க அரசுக்கு நன்கு தெரிந்தும் மக்களைக் காப்பாற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “காட்டு யானை தாக்கி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ் மற்றும் அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் கொடூர மரணம் அடைந்திருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது மரணத்திற்குக் காரணமான ஆட்சியாளர்களின் மெத்தனத்தைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இருவரது திடீர் மரணத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தராஜ் கழகப் பணியிலும் பொதுப் பணியிலும் தீவிரமாகப் பணியாற்றி மக்களின் அன்பையும் கழகத்தினரின் அன்பையும் பெற்றவர். அ.தி.மு.க அரசின் அலட்சியத்துக்குக் கழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகி இருப்பது மட்டுமின்றி இதுவரை கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் 10 பேர் காட்டு யானை தாக்குதலுக்குப் பலியாகி இருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

காட்டு யானைகளால் மக்களின் உயிருக்கு ஆபத்து என்பது அ.தி.மு.க அரசுக்கு நன்கு தெரிந்தும் மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த அனைவரது குடும்பத்திற்கும் தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் - இதுபோன்ற தாக்குதல்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “நீலகிரி மாவட்டத்தில் தி.மு.கழகத்தின் செயல்வீரராகத் திகழ்ந்த கூடலூர் ஒன்றிய கவுன்சிலர் அண்ணன் ஆனந்தராஜ்-அவரது மகன் பிரசாந்த் ஆகியோர் கூடலூர்- கொளப்பள்ளியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கும் கழகத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories