தமிழ்நாடு

“அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு; பதவி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“ஏழை எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை மீண்டும் போராட்டப் பாதைக்குத் தள்ள முயற்சி செய்வது, கேடுபயக்கக் கூடியதாகும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு; பதவி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"அரசு மருத்துவர்கள் கொரோனா காலத்தில் ஆற்றிய தன்னலமற்ற பணிகளை நினைவில் கொண்டு, அவர்களது நீண்ட காலக் கோரிக்கையான கால முறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் - தங்களின் உயிரையும் பணயம் வைத்து, இரவு பகல் பாராமல், தன்னலம் சிறிதுமின்றிப் பணியாற்றிய அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய உயர்வுக் கோரிக்கையை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் அலட்சியம் செய்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

மாபெரும் போராட்டத்தை நடத்திய அரசு மருத்துவர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்குத் திரும்பினர். அவர்களில் 118 பேரின் மாறுதல் உத்தரவை, 8 மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தின் தலையீட்டால் ரத்து செய்த அ.தி.மு.க. அரசு, போராட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் மீது எடுத்த துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கையை இன்றுவரை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது, உயிர் காக்கும் பணியில் உள்ள மருத்துவர்களின் உயர் மதிப்பைப் புரிந்து கொள்ளாமல், உதாசீனப்படுத்துவதாகும்.

“அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு; பதவி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போராட்டம் முடிந்து ஓராண்டு ஆகியும் முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதி அடிப்படையில் இன்னும் அரசு மருத்துவர்கள் கோரிய ஊதிய உயர்வினை அளிக்கவும் இல்லை; அது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கவில்லை.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது ஆட்சியில், 23.10.2009 தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண்:354 ன்படி “தற்போது 8,15,17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை” “5,9,11, 12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும்” என்று அரசு மருத்துவர்கள் தொடர்ந்து நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். 2018-ல் மிகப்பெரிய போராட்டத்தைக் கூட நடத்தினார்கள்.

உயர்நீதிமன்றம் தலையிட்டு, ஒருநபர் குழு நியமித்து, உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று அ.தி.மு.க. அரசுக்கு அறிவுறுத்தியும் கூட இதுவரை கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசுப் பணியிலும், மாநில அரசுப் பணியிலும், ஒரே அடிப்படைச் சம்பளத்தில் பணியில் சேர்ந்தாலும், மத்திய அரசு மருத்துவர்கள் விரைவில் பதவி உயர்வு பெறுகிறார்கள்; காலம் சார்ந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு பெறுகிறார்கள்.

ஆனால் மாநில அரசில் பணியில் சேரும் மருத்துவர்கள் மட்டும் அத்தகைய பயன்களைப் பெற நீண்ட வருடங்கள் காத்திருக்க வேண்டிய மிகப் பரிதாபகரமான நிலை இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசில் பணி புரியும் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவர், 4 வருடங்களில் பெறும் ஊதிய உயர்வை, தமிழக அரசில் பணி புரியும் மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தே பெறுகிறார். இதே போல் மத்திய அரசு மருத்துவர்கள் 9 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை, தமிழக அரசு மருத்துவர்கள் 17 ஆண்டுகள் கழித்தும், அவர்கள் 13 ஆண்டுகளில் பெறும் ஊதிய உயர்வை இவர்கள் 20 ஆண்டுகள் கழித்தும் பெறக்கூடிய அசாதாரண சூழலில்தான், தினமும் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

“அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு; பதவி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கோடிக்கணக்கான மக்களின் சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளை, பொறுப்புள்ள ஓர் அரசு உடனடியாகக் கவனிக்க வேண்டும்; அக்கறை கொண்டு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது கூட முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு, இந்த கொரோனாவிலும் புரியாமல் இருப்பது கொடுமையானதே.

கொரோனாவில் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து- முன்கள வீரர்களாக நின்று, மக்களைக் காப்பாற்றியவர்கள் - இன்னும் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் அரசு மருத்துவர்கள். அவர்களில் உயிர்த் தியாகம் செய்தோருக்கு, அரசு அறிவித்த உதவித் தொகையையும் இதுவரை வழங்கவில்லை. எத்தனை பேர் கொரோனா பணியில் உயிர் நீத்தார்கள் என்ற கணக்கும் அரசிடம் முறையாகவோ சரியாகவோ இல்லை. இவ்வளவு சோதனைகளுக்கு இடையில், மக்களைப் பாதுகாக்கும் மாபெரும் பணியில், இடை விடாது கடமை ஆற்றிவரும் அரசு மருத்துவர்களின் கோரிக்கையைக் கூட அ.தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக - ஏழை எளிய மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை மீண்டும் போராட்டப் பாதைக்குத் தள்ள முயற்சி செய்வது, கேடுபயக்கக் கூடியதாகும்.

“அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு; பதவி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

எனவே, அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து- 23.10.2009 தேதியிட்ட அரசாணை எண்:354 ன்படி,தற்போது உள்ள 8,15,17,20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் “காலம் சார்ந்த ஊதிய உயர்வை” 5,9,11, 12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்கும் வகையில் அரசு ஆணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும்; மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு தமிழக அரசு மருத்துவர்களுக்கும் கிடைத்திடக் காலதாமதமின்றி முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவு பிறப்பிக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இது தவிர, “அரசு மருத்துவர்களின் மீதுள்ள துறை நடவடிக்கைகளை ரத்து செய்வது”, “நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கும் முடிவினை எடுத்து - நீக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட பணியிடங்களை மீண்டும் உருவாக்குவது”, “முதுநிலை மற்றும் உயர் சிறப்புத் தகுதி மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு”, உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மீதும் உடனடியாக அனுதாபத்துடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவர்களின் கொரோனா காலப் பணிகளை நினைவில் கொள்க! அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை, மேலும் தாமதமின்றி நிறைவேற்றிடுக!!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories