தமிழ்நாடு

KV பள்ளிகளில் தமிழுக்கு இருக்கும் நிபந்தனை ஏன் இந்தி, சமஸ்கிருதத்துக்கு இல்லை ? - கி.வீரமணி கேள்வி!

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநிலங்களில் இயங்கிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெறவேண்டும் என்பது சட்டத்தின் நிலை.

KV பள்ளிகளில் தமிழுக்கு இருக்கும் நிபந்தனை ஏன் இந்தி, சமஸ்கிருதத்துக்கு இல்லை ? - கி.வீரமணி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் இடம்பெறும் என்ற போர்வையில் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு - மத்திய அரசின் இந்தக் கண்ணிவெடியில் ஏமாறவேண்டாம் - தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு - நாட்டு மக்களுக்குத் தேவையான வளர்ச்சி - நல்வாழ்வில் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இவற்றில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ரிசர்வ் வங்கியே கைவிரித்து விட்டது. பொருளாதாரத் துறையில் பிரதமர் மோடியால் திடீர் என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் மதிப்பு இழப்பு என்பது மிகவும் கேடான பாரதூர விளைவுகளை ஏற்படுத்தி நாட்டையே நலிவுப் பெரும் பள்ளத்தில் தள்ளிவிட்டது.

இதிலிருந்து விடுபடுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். பா.ஜ.க. என்பது சங் பரிவார்களின் அரசியல் பெற்றெடுத்த பிள்ளை. அதன் கவலை எல்லாம் கலாச்சாரத் துறையில் நாட்டை எப்படி ஹிந்து மயமாக்குவது என்பதுதான். 2014 இல் மோடி பிரதமரான காலந்தொட்டு அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் எல்லாமே இந்த வகையில்தான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

KV பள்ளிகளில் தமிழுக்கு இருக்கும் நிபந்தனை ஏன் இந்தி, சமஸ்கிருதத்துக்கு இல்லை ? - கி.வீரமணி கேள்வி!

மொழி பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமாம்!

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று போற்றப்படும் எம்.எஸ்.கோல்வால்கரின் அசைக்க முடியாத கருத்தாகும். ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தில் புகழ்பெற்ற நூலாகக் கருதப்படும் ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ (தமிழில் ‘ஞானகங்கை’) எனும் நூலில் இதனை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடிப்படையில்தான் இந்திய அளவில் சமஸ்கிருதத் திணிப்பைக் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ள பல்வகையான திரைமறைவு வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மூன்றாவது மொழியாக நீண்ட காலமாக இருந்த ஜெர்மன் மொழியை நீக்கி, அந்த இடத்தில் சமஸ்கிருதம், ஹிந்தியைக் கொண்டுவந்துள்ளது. ஹிந்தி என்பது சமஸ்கிருதக் குடும்பத்தின் சவலைப்பிள்ளை. அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

தேசிய கல்விக் கொள்கை என்பதில் இவ்விரு மொழிகளையும் திணிப்பது முக்கிய அம்சமாகும். இதற்குக் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிய நிலையில், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் என்று பெயர் அளவுக்குச் சொல்லி மடைமாற்றம் செய்து வருகிறது. மத்திய அரசு நடத்தும் கல்விக் கூடங்களில்கூட மாநில மொழி படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறோமே என்ற பசப்பு மொழி பேசுகிறார்கள்.

தமிழைக் கற்பிப்பது என்பதில் உள்ள தந்திரங்கள்!

மாநில மொழிகளைக் கற்பிக்கும் யோக்கியதை எந்த வகையில் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் - மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் உண்டு என்று ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளனர். தேசிய கல்விக் கொள்கையில் மூன்று மொழி என்று கூறப்பட்டுள்ள நிலையில், கேந்திரிய வித்யாலயக் கல்விக் கூடங்களும் தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பிலிருந்து தொடருவது ஏன்?

அதுவும் வாரத்திற்கு இரண்டு, மூன்று வகுப்புகள்தானாம் - சொல்லிக் கொடுப்போர் பகுதிநேர ஆசிரியர்களாம். பிப்ரவரி மாதம் வரைதான் தமிழ்ப்பாட வகுப்புகளாம். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இசைந்தால்தான் தமிழாம். இந்த அளவுகோல் ஹிந்தி, சமஸ்கிருதத்திற்கு ஏனில்லை?

இரண்டே மொழிதான் தமிழ்நாட்டில். தமிழும் - ஆங்கிலமும்தான் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு நியாயம் கற்பிப்பது போன்ற தோற்றப் பிழையை உண்டாக்கும் வகையில் தமிழ்நாட்டில் மத்திய அரசு பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இந்த ஏமாற்று வேலைகளில் மயங்கக் கூடியதல்ல - தந்தை பெரியார் பிறந்த - திராவிட இயக்கம் வேரோடியுள்ள தமிழ்நாடு.

மாநிலத்தில் உள்ள ஓர் அரசு - மத்திய அரசின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் கட்டளைத் தம்பிரான்களாக இருக்கிறது என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, பார்ப்பன - ஹிந்துத்துவ கலாச்சார திணிப்புகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாநிலங்களில் இயங்கிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெறவேண்டும் என்பது சட்டத்தின் நிலை.

மொழிப் பிரச்சினையில் தமிழ்நாடு கொதி நிலையடையும்!

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசுக்குக் கட்டுப்பட்ட பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறையில் மாற்றப்பட மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று ஆக்கிக் கொண்டார்கள்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றப்பட்டால், தமிழைப் படிக்கவேண்டிய அவசியம் இல்லையல்லவா! ஹிந்தி, சமஸ்கிருதம் என்பது வெறும் மொழி திணிப்பல்ல - கலாச்சாரப் படையெடுப்பே - இதில் தமிழ்நாடு ஏமாறாது - ஏமாறவும் விடமாட்டோம். தமிழ்நாடு அரசு - மத்திய அரசின் கேந்திரியக் கல்வி நிலையங்களில் தமிழ்ப்பற்றிய ஏமாற்றுத் தந்திர முடிவை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்து உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் மொழிப் பிரச்சினை எத்தகைய கொதி நிலையை ஏற்படுத்தக் கூடியது என்பதை மத்திய - மாநில அரசுகள் உணராவிட்டால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories