தமிழ்நாடு

உணவு டெலிவரி செய்பவர்கள் போல நடித்து வழிப்பறி : சென்னையில் நூதன கொள்ளை முயற்சி - பொதுமக்கள் அச்சம்!

இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதைப்போல் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவு டெலிவரி செய்பவர்கள் போல நடித்து வழிப்பறி : சென்னையில் நூதன கொள்ளை முயற்சி - பொதுமக்கள் அச்சம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதைப்போல் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் தனது நண்பர் ஆகாஷுடன் இருசக்கர வாகனத்தில் மகாபலிபுரம் சென்றுவிட்டு அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக துரைபாக்கம் அருகே பெட்ரோல் இல்லாத காரணத்தினால் வாகனம் நின்றுவிட்டது.

அப்போது அங்கு வந்த swiggy டி-சர்ட் அணிந்த ஒருவரும் phonepe என அச்சிடப்பட்டிருந்த டிசர்ட் அணிந்த மற்றொருவரும் கங்காதரன் மற்றும் அவரது நண்பர் ஆகாஷுக்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கங்காதரனின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பித் தருவதாக கூறி ஒரு நபர் அவரது வண்டியை பெருங்குடி டோல் கேட் அருகே தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். அவர் திரும்பிவரும்வரை மற்றொரு நபர் உடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திடீரென கங்காதரனுடன் இருந்த நபர் கங்காதரன் மற்றும் அவரது நண்பர் ஆகாஷை மிரட்டி செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இரவு ரோந்து போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த முருகவேல் (24) மற்றும் முரளி (27) எனத் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இரவு நேரங்களில் உணவு டெலிவரி செய்வதைப் போல் டிசர்ட் அணிந்துகொண்டு தனியாக வரும் நபர்களை மிரட்டி செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த போலிஸார், இதுபோன்ற நூதன வழிப்பறி கொள்ளையர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories