தமிழ்நாடு

நெல்லையில் 103 கொரோனா மரணங்களை மறைத்த அரசு : “உயிரோடு விளையாட வேண்டாம்! உண்மை வேண்டும்!” - மு.க.ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் 103 கொரோனா மரணங்களை மறைத்த அரசு : “உயிரோடு விளையாட வேண்டாம்! உண்மை வேண்டும்!” - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 103 பேர் விடுபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பற்றிய விவரங்களை திருநெல்வேலியைச் சேர்ந்த பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்தார்.

ஆர்.டி.ஐ கேள்விக்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பொது தகவல் அலுவலர் ஆ.செந்தில்வேல் பதில் அளித்துள்ளார்.

அதன்படி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இணைநோய்கள் ஏதுமின்றி கொரோனாவால் மட்டும் ஜூன் மாதத்தில் 2 பேர், ஜூலை மாதத்தில் 43 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 37 பேர் என 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெல்லையில் 103 கொரோனா மரணங்களை மறைத்த அரசு : “உயிரோடு விளையாட வேண்டாம்! உண்மை வேண்டும்!” - மு.க.ஸ்டாலின்

இணைநோய்கள் மற்றும் கொரோனாவால் மே மாதத்தில் ஒருவர், ஜூன் மாதத்தில் 7 பேர், ஜூலை மாதத்தில் 61 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டு ஜூன் மாதத்தில் 2 பேர், ஜூலை மாதத்தில் 27 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே மாதத்தில் ஒருவர், ஜூன் மாதத்தில் 11 பேர், ஜூலை மாதத்தில் 131 பேர், ஆகஸ்ட் மாதத்தில் 45 பேர் என இதுவரை 285 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு தினமும் வெளியிடும் கொரோனா தொடர்பான பட்டியலில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 182 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 103 மரணங்கள் மறைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பின்வருமாறு :

“கொரோனாவால் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால், ஆர்.டி.ஐ தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்: 103

சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்! உயிரோடு விளையாட வேண்டாம்! உண்மை வேண்டும்.” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories