தமிழ்நாடு

“49.8 சதவிகிதத்துடன் வேலையின்மையில் தமிழகம் முதலிடம்; இது தொடர்ந்தால் வறுமையே மிஞ்சும்” - தி.மு.க. சாடல்!

தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடு குறித்து தி.மு.க.வின் பொன்.முத்துராமலிங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவரித்துள்ளார்.

“49.8 சதவிகிதத்துடன் வேலையின்மையில் தமிழகம் முதலிடம்; இது தொடர்ந்தால் வறுமையே மிஞ்சும்” - தி.மு.க. சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க., செய்தித் தொடர்பாளர் பொன்.முத்துராமலிங்கம், மாநிலத்தில் குறைந்து வரும் முதலீடு மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

முதலீடு செய்ய உகந்த மாநிலமாகத் திகழ்ந்த தமிழகம், கடந்த சில ஆண்டுகளாக அரசின் மோசமான ஆட்சியாலும், முறைப்படுத்தப்படாத திட்டங்களாலும் தொடர்ந்து பாேராட்டங்கள் நடந்து, இந்திய அளவில் போராட்டங்களின் தலைநகரம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.

தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையின் அறிக்கையின்படி, முதலீடு செய்ய சிறந்த மாநிலம் என்ற அந்தஸ்தை அண்மைக் காலமாக, தமிழகம் இழந்து வருகிறது. இடைக்கால அறிக்கையில் முதலீடு செய்ய உகந்த 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. இது மிகவும் கவலைக்குரிய பிரச்சனையாகும், இதனால் மாநிலத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் சரிவுக்குள்ளாகும்.

மாநிலத்தின் பொருளாதாரத்தில் சேவைகள் துறை 45 சதவிகதமும், உற்பத்தி துறை 34 சதவிகிதமும், வேளாண்மை 21 சதவிகிதமும் பங்காற்றி வருகிறது. முதலீட்டைப் பொறுத்தவரை 52 சதவிகிதமும் அரசாங்கமும், இந்திய தனியார் நிறுவனங்கள் 29.9 சதவிகிதமும் மற்றும் வெளிநாட்டில் இருந்து 14.9 சதவிகிதமும் கிடைக்கின்றன. ஆனால் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மோசமான ஆட்சியாலும், நிர்வாக குளறுபடிகளாலும் முதலீடு குறைந்து, தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பொன்.முத்துராமலிங்கம் - தி.மு.க செய்தித் தொடர்பாளர்
பொன்.முத்துராமலிங்கம் - தி.மு.க செய்தித் தொடர்பாளர்

அவர் சுட்டிக்காட்டிய பிரச்சனைகள்

தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கையின்படி, தமிழகம் முதலீட்டை ஈர்க்கும் பட்டியலில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 43.5 சதவிகித்திலிருந்து கடந்த ஏப்ரலில் 49.8 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய வேலையின்மை விகிதமான 23.5 விட இரண்டு மடங்கு 49.8 சதவிகித்துடன் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதே மோசமான நிலை தொடர்ந்தால், தமிழகத்தில் வறுமையும், நமது இளைஞர்கள் பிற மாநிலங்களில் வேலை தேடிச் செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

2017ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஈர்க்கப்பட்ட ரூ.3.95 லட்சம் கோடியில் தமிழகம் வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவான முதலீட்டை மட்டுமே பெற்றது. காரணம் அப்போது மாநிலத்தில் நிலவிய நிலையற்ற அரசியல் சூழ்நிலை. அதே ஆண்டில் 62 திட்டங்களில் ரூ. 3,131 கோடிகள் முதலீடு பெறப்பட்டபாேதும், தேசிய முதலீட்டில் (0.8) சதவீதம் மட்டுமே தமிழகம் பெற்றது.

மாநிலத்தின் கடன்சுமை எல்லைமீறிச் சென்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், ஆண்டிற்கு 12.4 சதவீதம் வரை உயரந்து, கடந்த பத்தாண்டுகளில் நான்கு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இருப்பினும் மாநிலத்தின் மொத்த உற்பத்தியின் மதிப்பு கடனுக்கு இணையாக அதிகரிக்க வில்லை, 2006 - 2011 ஆண்டில் பத்து சதவீதமாக இருந்த மாநில மொத்த உற்பத்தி கடந்தபத்தாண்டுகளில் வெறும் 6.5 சதவீதமாக இருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்கவும், தொழில் முனைவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமையாகும்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் தமிழகத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் முதலீட்டை ஈர்த்து, அதிகளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories