தமிழ்நாடு

“சாத்தான்குளம் கொடூர குற்றத்திற்கு துணைபோகிறதா அரசு?” - என்ன செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

அய்யா எடப்பாடி அவர்களே, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் மீது படிந்த நரகத்தின் நிழலை அகற்ற வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதியை வழங்கவேண்டும்.

“சாத்தான்குளம் கொடூர குற்றத்திற்கு துணைபோகிறதா அரசு?” - என்ன செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரண’ மர்மம் குறித்து எழுத்தாளர் கரிகாலன் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அப்பதிவு பின்வருமாறு :

தேரா மன்னா செப்புவதுடையேன்!

பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் கதைகளை பள்ளிப் பருவத்திலேயே மூட்டைக்கட்டி வைத்துவிட்டேன். அவற்றை விடவும் கொடுமையான கிரிமினல் கதைகளை தினகரன், தி. தந்தி வெளியிட்டன. அகதா கிறிஸ்டியென்று ஒரு பேய்க்கதை எழுத்தாளர். எங்கள் கல்லூரி காலத்தில் எழுதினார்.

இரவுதான் சாத்தான்குளம் போலீஸ் எழுதியிருந்த பேய்க் கதையைப் படித்தேன். வாழ்வதற்கான சிறு நம்பிக்கையையும் அச்சத்தையும் அகற்றிய கதையது!

ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான் குளத்தில் செல்ஃபோன் கடை நடத்திவந்தவர்கள். ஜெயராஜ் கடையை மூடத் தாமதிக்கிறாரென, அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஊரடங்குகால சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு, தமிழகமெங்கும் போலீஸ் அத்துமீறி வருவதை நேரிலும், தொலைக்காட்சிகளில் கவனித்து வருகிறோம்.

ஜெயயாஜை, உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் காவல்நிலையம் அழைத்துச் சென்றதை அறிந்து, மகன் பென்னிக்ஸும் காவல் நிலையம் போயிருக்கிறார். இருவரையும் போலீஸார் மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். கடனுக்கு மொபைல் தரவில்லை, என்கிற முன்விரோதம், உதவி ஆய்வாளருக்கு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

மோசமாக காயமடைந்த நிலையில் மாஜிஸ்ட்ரேட்டிடம் ரிமாண்ட் பெற்று அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் கிளைச் சிறைகளில் வைக்காமல், தூரத்திலிருக்கும் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரையும் அடைத்துள்ளார்கள்.

சிறையில் பார்க்க வந்த நண்பர்களிடம், போலீஸ் அடித்ததால், ஆசனவாயில் தொடர்ந்து ரத்தம் வருவதாக பென்னிக்ஸ் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, இருவரும் இறந்ததாக போலீஸ் கதை சொல்கிறது.

“சாத்தான்குளம் கொடூர குற்றத்திற்கு துணைபோகிறதா அரசு?” - என்ன செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?
Vignesh

இந்த வழக்கு உள்துறை சம்மந்தப்பட்டது. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் வருமென்று அரசும் போலீஸ் பக்கமே பேசுகிறது.

இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அனைத்தும் புனைகதைத் தன்மையுடையவை. தந்தை மகன் இருவரையும் மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தாமலேயே influence செய்து ரிமாண்ட் பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சாதாரண S.I ஒருவரால் மாஜிஸ்ட்ரேட், மருத்துவர், நீதி இவற்றையெல்லாம் ஒருசேர வளைக்கமுடியுமா? ஆகவே, இந்தக் குற்றச்செயல் அரசுக்கு கெட்டபெயரைப் பெற்றுத்தரும் என அரசாங்கம் இவர்களுக்கு உதவுவதாக எண்ணவும் இடமிருக்கிறது.

தவறு செய்த உதவி ஆய்வாளரை கொலைக் குற்றவாளியாகக் கருதி, அவருக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர முயற்சி மேற்கொண்டிருந்திருந்தால், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும். ஆனால் முதல்வரோ ஏழைகளின் கண்ணீரில் இருக்கும் உண்மையைப் படிக்க விரும்பாமல் எஃப்.ஐ.ஆரை தூக்கிக் காட்டுகிறார்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையும் வழக்கமான தொனியில் கூழாத்துகிறது. ஜெயராஜுக்கு மூன்று மகள்கள். இந்தக் குடும்பத்தின் ஆணிவேரையும் விழுதையும் வெட்டியிருக்கிறது போலீஸ்.

நாம் அமெரிக்காவை முதலாளித்துவ நாடு என்று கடுமையாக விமர்சிக்கிறோம். ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை இப்படித்தான், டெரெக் சொவின் என்கிற போலீஸ்காரன் சக போலீஸ்காரர்கள் உதவியோடு கொன்றான். நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த மனித உரிமை மீறலுக்காக இன ஒதுக்கலை கடைபிடிக்காமல், கள்ள மௌனம் சாதிக்காமல், அமெரிக்காவே கொதித்தெழுந்தது.

'தேரா மன்னா செப்புவதுடையேன்' என ஜெயராஜின் பெண் கேட்கும் கேள்விகளை செய்தித் தொலைக்காட்சியின் விளம்பர இடைவெளியில் தமிழ்ச் சமூகம் மறந்துவிடுகிறது.

அமெரிக்காவில் போலீஸ்காரன் டெரெக் சொவினுடையே மனைவியே கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் நியாயத்தை சிந்தித்தார். கணவனுக்காக வழக்காட அவர் விரும்பவில்லை.

ஜார்ஜ் ஃபிளாய்டின் ரத்தக்கறையைக் கழுவ விரும்பிய மின்னசோட்டா மாகாண அரசு, அங்கு தன் காவல்துறையையே கலைத்தது.

“சாத்தான்குளம் கொடூர குற்றத்திற்கு துணைபோகிறதா அரசு?” - என்ன செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

எடப்பாடி என்ன செய்யப்போகிறார்?

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின், அண்ணாவின் மேற்கோளைக் காட்டி, உள்ளம் இருக்கிற இடத்தில் பள்ளம் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.

அய்யா எடப்பாடி அவர்களே, உங்கள் பள்ளத்தை நீதியால் கருணையால் நீங்கள் நிரப்பவேண்டும். சாத்தான்குளம் காவல் நிலையத்தின் மீது படிந்த நரகத்தின் நிழலை அகற்ற வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதியை வழங்கவேண்டும். கொலைத்தொழில் புரிந்த காவலர்களுக்கு பணி நீக்கம் போன்றவை, போதுமான தண்டனை இல்லை.

கோவலனுக்கு அநீதி புரிந்த பாண்டிய மன்னனின் கதை உங்களுக்கு மறந்திருக்காது. கண்ணகியின் கோபத்தால் மதுரை எரிந்தது வெறும் உருவகம் அல்ல. ஒன்றல்ல ஜெயராஜ் வீட்டில் மூன்று கண்ணகிகள் இருக்கிறார்கள்!

- கரிகாலன்

banner

Related Stories

Related Stories