தமிழ்நாடு

“போலிஸாரின் மிருகத்தன தாக்குதலால் பலியானோருக்கு நீதி வேண்டும்” : டி.ஜி.பி-யிடம் கனிமொழி எம்.பி மனு!

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி-யிடம், தி.மு.க எம்.பி., கனிமொழி மனு அளித்துள்ளார்.

Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக காவல்துறை தலைவரிடம் (சட்டம் ஒழுங்கு), தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., மனு அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு :

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித் தனமான அடித்து உதைத்து, அதில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல்நிலையத்தில் போலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவருக்கும் மருத்துவ உதவிகள் கொடுக்காமல்- அவர்கள் தாக்கப்பட்டதையும் மாஜிஸ்திரேட்டிடம் மறைத்து நீதிமன்ற காவல் பெற்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளது மனித நேயமற்றது. மிக மோசமான மனித உரிமை மீறல். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்துவிட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன.

ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இவ்வளவு கொடூரமான கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டால் மட்டும் நீதி வழங்கியதாக அர்த்தம் ஆகாது. பறிபோன உயிர்களை யார் திருப்பிக் கொடுப்பது? ஆகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்க்கவேண்டிய முழுப்பொறுப்பு காவல்துறை தலைவர் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

பார்வையில் கண்டுள்ள ஜெயராணியின் மனுவினை தங்களது நடவடிக்கைக்காக அனுப்புகிறேன். அவரது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், போலிஸார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நிக்கம் செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories