
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவால் மக்கள் பெரும்பாலும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என தி.மு.க தலைவர் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 200-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு ஏற்பாட்டில் மத்திய சென்னை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “தமிழகத்தில் கொரோனா கண்டறியும் பரிசோதனைக் கருவிகள் போதிய அளவில் இல்லை. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு உள்ளவரின் குடும்பங்களுக்கு டெஸ்ட் எடுக்க தமிழக அரசு தவறியுள்ளது. இதனால் கொரோனா அதிகரிக்க தமிழக அரசே காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி, வாழ்வாதாரம் இழந்து வேலை இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதி போதியளவு இல்லை. அதை அதிகப்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.








