தமிழ்நாடு

சிறையில் உள்ள முருகனின் தந்தை இலங்கையில் மரணம்.. வீடியோ காலில் கூட பார்க்க அனுமதிக்காத சிறைத்துறை.. 

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரில் நளினியின் கணவர் முருகனின் தந்தை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சிறையில் உள்ள முருகனின் தந்தை இலங்கையில் மரணம்.. வீடியோ காலில் கூட பார்க்க அனுமதிக்காத சிறைத்துறை.. 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் (நளினியின் கணவர்) முருகனின் தந்தை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

இராஜீவ் வழக்கில் மரண தண்டனை பெற்று, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த முருகனும் ஒருவர். இவரின் தந்தை வெற்றிவேல். வயது 75. புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சிறைக் கைதிகளுக்கு அவர்களது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு சிறைத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆகையால், முருகனும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிந்திடுவதற்காக வீடியோ கால் மூலம் பேச அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால், சிறைத்துறை நிர்வாகமோ அதனை ஏற்க மறுத்திருக்கிறது. பாரபட்சமான நிலையை அரசு தொடர்ந்து கையாண்டு வருவதற்கு இதுவும் ஒரு சாட்சியாகவே விளங்குகிறது. பிறகு, தனது வழக்கறிஞர் மூலம், சிறைத்துறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முருகன். அந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக சிறைத்துறை கூறியிருந்தது.

முருகனின் தந்தை வெற்றிவேல்
முருகனின் தந்தை வெற்றிவேல்

இப்படி இருக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் உள்ள மருத்துவமனையில் கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த முருகனின் தந்தை வெற்றிவேல் நேற்று (ஏப்ரல் 27) அதிகாலை 4 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் அவருடைய உடலை இத்தாவில்லில் உள்ள அவர்களின் வீட்டுக்கு குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர். இன்று (ஏப்ரல் 28) காலையில், மறைந்த வெற்றிவேலின் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தந்தையின் இறுதி நிகழ்வுகளை கூட வீடியோ கால் வழியாகவாவது காண அரசிடம் முருகன் அனுமதி கோரியும் அதற்கு இன்னும் பதிலளிக்காதது வேதனையளிப்பதாகவும், அரசு மீதான நம்பிக்கையை சிதைந்து போவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

banner

Related Stories

Related Stories