தமிழ்நாடு

மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி ‘வாட்ஸ்அப்’ மூலம் காசு பார்த்த இருவர் கைது! #CoronaVirus

சென்னையில் வாட்ஸ்-அப் குழுக்களின் மூலமாக சானிடைசர் மற்றும் முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 1004 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்க அடிக்கடி கையைக் கழுவ வேண்டும், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசும், மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் சானிடைசர், முகக் கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. சில வியாபாரிகள் கொரோனா பாதுகாப்புப் பொருட்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி ‘வாட்ஸ்அப்’ மூலம் காசு பார்த்த இருவர் கைது! #CoronaVirus

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (24) மற்றும் முகமது நிஜாம் (24) ஆகிய இளைஞர்கள் சானிடைசர், முகக் கவசம் போன்றவற்றை மொத்தமாக வாங்கி வைத்தி, அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா அச்சத்தைப் பயன்படுத்தி காசு பார்க்கத் திட்டமிட்ட அவர்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே சானிடைசர், முகக் கவசங்களை வாங்கிச் சேகரித்துள்ளனர்.

பின்னர் வாட்ஸ்-அப் குழுக்களின் மூலமாக சானிடைசர் மற்றும் முகக் கவசங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் கார்த்திகேயன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது விற்பனைக்கு வைத்திருந்த நூற்றுக்கணக்கான சானிடைசர் பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகளின் புகாரின் பேரில் கார்த்திகேயனைக் கைது செய்த போலிஸார், அவருடன் இணைந்து பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட அவரது நண்பர் முகமது நிஜாமையும் கைது செய்தனர்.

முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என அரசு கடுமையாக அறிவுறுத்தியுள்ள போதிலும் இத்தகைய மோசடிகள் நிகழ்வது மக்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories