தமிழ்நாடு

“சாதிவெறியர்களால் கடத்தப்பட்ட இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”: முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சாதிவெறிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

“சாதிவெறியர்களால் கடத்தப்பட்ட இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”: முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதற்காக பா.ம.க-வினரால் கடத்தப்பட்ட இளமதியை உடனே மீட்டுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். கடத்தியவர்களுக்குத் துணைபோகும் அமைச்சரைக் கட்டுப்படுத்தவேண்டும் எனக் கோரி தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி என்பவரும் கவுண்டப்படி அருகிலுள்ள தர்மபுரியை சேர்ந்த செல்வன் என்பவரும் ஒரே மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு இடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகக் காதல் ஏற்பட்டு அது இரு வீட்டாருக்கும் தெரிந்தும் உள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். திராவிட விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் அந்த திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்துள்ளனர்.

“சாதிவெறியர்களால் கடத்தப்பட்ட இளமதியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”: முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை!

திருமணம் நடந்த இரவு 100க்கும் மேற்பட்ட பா.ம.க மற்றும் சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள் மணமக்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து அவர்களை மட்டுமின்றி திருமணம் நடத்தி வைத்த தோழர்களையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் மணமக்களை காரில் கடத்திச் சென்றுள்ளனர். தி.வி.க தோழர்கள் வழிமறித்து மணமகன் செல்வத்தை மட்டும் மீட்டுள்ளனர். ரவுடிகளைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை மணமகள் இளமதி மீட்கப்படவில்லை. சாதிவெறியர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்றும் தெரியவில்லை.

அப்பகுதியில் இருக்கும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராடியதன் காரணமாக காவல்துறை 18 பேரை கைது செய்துள்ளது. ஆனால், மணமகளை மீட்பதற்கு அக்கறை காட்டாமல் உள்ளது. இதுவரை மணப்பெண்ணை மீட்க முடியாமல் இருப்பதற்கு அமைச்சர் ஒருவரின் தலையீடே காரணம் எனத் தெரிகிறது. எனவே இந்த பிரச்னையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு இளமதியை மீட்கவும் மணமக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் சாதிவெறிக் குற்றங்களைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories