தமிழ்நாடு

"நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா?” - பூவுலகின் நண்பர்கள் ‘பகீர்’ எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைகளை தீர்ப்பதற்காக வழி எதுவென விளக்கியுள்ளது ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு.

"நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா?” - பூவுலகின் நண்பர்கள் ‘பகீர்’ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திய வழிமுறைகளை நோக்கி பயணப்படுதலே தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கும் என ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு பல்வேறு ஆதாரங்களின் மூலம் விளக்கியுள்ளது.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“தமிழகத்தில் இந்திய தரச்சான்றிதழ் (ISI) மற்றும் FSSAI உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயங்கும் புட்டி நீர் (கேன் தண்ணீர்) ஆலைகளையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்படும் நிறுவனங்களையும் மூட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை அடுத்து கடந்த வியாழன், பிப்ரவரி 27 முதல் கேன் குடிநீர் நிறுவனங்கள் தடையை திரும்பப் பெற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 650 ஆலைகள் இந்த உத்தரவின் பெயரில் மூடப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பற்ற கேன் குடிநீரினால் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டையும், அதிகப்படியாக நடக்கும் நிலத்தடி நீர் சுரண்டலையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தடுக்கும் என்ற அடிப்படையில் இந்த உத்தரவை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்கிறது.

மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம் வகுத்துள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 2018இன் படி, நிலத்தடி நீர் எடுக்கப்படும் பகுதிகளை பாதுகாப்பான பகுதி (Safe), Semi-Critical, Critical & Over Exploited என நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் Critical, Over exploited பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தியும் Metro Water நீரை பயன்படுத்தியும் குடிநீர் ஆலைகள் இயங்கும் பட்சத்தில் அதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் இயங்கி வந்த 1800 Can குடிநீர் ஆலைகளில் 1200 ஆலைகள் நிலத்தடி நீர் எடுக்கும் தடையில்லா சான்றிதழ் இல்லாமலும், 132 ஆலைகள் ISI மற்றும் FSSAI உரிமங்கள் இல்லாமலும் பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் இது தாமதமான நடவடிக்கை தான் என்றாலும், தற்போது தமிழக அரசு சட்டவிரோத ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

"நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா?” - பூவுலகின் நண்பர்கள் ‘பகீர்’ எச்சரிக்கை!

ஆனால் குழாய் குடிநீரின் தரத்தை உயர்த்தாமல், குழாய் வழியாக ஒவ்வொரு வீட்டிற்கும், பகுதிக்கும் தண்ணீரை கொண்டு சேர்க்காமல், RO தண்ணீர் உற்பத்தி முறைகளையும் ஆலைகளையும் வரைமுறைப்படுத்தி நிலத்தடி நீர் எடுப்பதை அரசே அங்கீகரித்து மக்களுக்கு பொதுவில் கிடைக்கவேண்டிய தண்ணீரை சந்தைப்படுத்துவது அரசின் இயலாமையையே காட்டுகிறது.

இலவச பாதுகாப்பான குழாய் குடிநீரை அரசே வழங்குவதுதான் வருங்காலங்களில் தமிழ்நாடு சந்திக்கப் போகும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக அமையும். தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றிற்கு சுமார் 5கோடி லிட்டர் தண்ணீர் கேன் (Can) தண்ணீர் நிறுவனங்களால் விநியோகிக்கபடுகிறது. (சென்னையில் மட்டும் 5 லட்சம் கேன்கள்). இதில் பெரும்பாலான கேன் தண்ணீர் ஆலைகள் RO (Reverse Osmosis) முறையையே தண்ணீரை சுத்திகரிக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு 20 லிட்டர் தண்ணீரை RO முறை மூலம் சுத்திகரிக்க 80 லிட்டர் நீரை RO Reject ஆக வீணடிக்கிறார்கள். அப்படி என்றால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு மட்டும் 25 கோடி லிட்டர் நிலத்தடி நீர் கேன் தண்ணீர் நிறுவனங்களால் வீணடிக்கப் படுகின்றது. நிலத்தடி நீர் வேகமாக வறண்டுக்கொண்டிருக்கும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 25 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவது முக்கியமான சூழலியல் பிரச்னையாகும்.

காலநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகும் தமிழகத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதும் , அரசு குழாய் நீரை பாதுகாப்பான குடிநீராக மக்களுக்கு விநியோகிப்பதும் காலத்தின் தேவையாக இருக்கிறது.

உலக நிலத்தடி நீர் பயன்பாட்டில் 25% நிலத்தடி நீரை இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது. இதில் இந்தியாவிலே அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. 2002ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25mm நிலத்தடி நீர் மட்டம் குறைவதாகவும், 122 உலக நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் நீர் தரக் குறியீட்டில் இந்தியா 120வது இடத்தில இருப்பதாகவும் Composite Water Management Index அறிக்கை குறிப்பிடுகிறது.

"நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா?” - பூவுலகின் நண்பர்கள் ‘பகீர்’ எச்சரிக்கை!

2018 ம் ஆண்டு வெளிவந்த நித்தி ஆயோக் அறிக்கையின் படி நாட்டின் நிலத்தடி நீர் இருப்பு 433 BCM மட்டுமே உள்ளது, இதுமட்டுமல்லாமல் 2030க்குள் நாட்டின் 40% மக்களுக்கு பருக பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் போகும் எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் 21 பெரும் நகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் எனவும் அதிலும் குறிப்பாக சென்னை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முற்றிலுமாக நீரின்றி வறண்டு போகும் என நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதன் அறிகுறிகளாகத்தான் 2019ம் ஆண்டு சென்னை கடும் வறட்சியைச் சந்தித்தது. 1976க்கு பிறகு 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் சென்னையின் மிக வறட்சியான மாதம் எனத் தெரிவிக்கிறது இந்திய வானிலை மையத்தின் தரவுகள் – IMD Data.

2018 பருவமழை பொய்த்ததை அடுத்து 2019ம் ஆண்டு சென்னை நீரின்றித் தவித்தது. சென்னையின் மூன்று ஆறுகளும், நான்கு பெரிய நீர்நிலைகளும், ஐந்து சதுப்பு நிலங்களும், ஆறு காடுகளும் நீரின்றி முழுவதுமாக வறண்டு போனதையடுத்து , தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தை போல சென்னையும் Zero day நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்தியா முழுமைக்கும் நீர் மேலாண்மைக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் தமிழத்திற்கு வெறும் 51%. இந்த அளவிற்கு குறைவான மதிப்பெண்கள் வைத்திருக்கும் தமிழகம், வருங்காலங்களில் அதன் நகரங்கள் முற்றிலுமாக Day Zero நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க தமிழக அரசு நீர் மேலாண்மையிலும் இது போன்ற நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகயிருக்கிறது.

உண்மையில் குடிநீர் பிரச்னையை தீர்க்க இது மட்டும் போதுமானதல்ல , பாதுகாப்பற்ற குடிநீர் குடிப்பதால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை இலவசமாக வழங்குவதும் நம் அரசுகளின் கடமை தான்.

கடந்த ஜனவரி 15ம் தேதி 500 TDS க்கு குறைவான இடங்களில் RO பயன்படுத்துவது நல்லதல்ல என தேசிய பசுமை தீர்ப்பாயம் சொன்னபோது, கேன் தண்ணீர் இருக்கிறது பார்த்துக்கொள்வோம் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் தற்போது கேன் தண்ணீர் தயாரிக்கக்கூடிய ஆலைகள் இழுத்து மூடப்படும்போது RO தண்ணீருக்கு மாறிவிடலாம் என மக்கள் முடிவெடுக்கிறார்களே தவிர அரசு தரவேண்டிய குழாய் நீர் குறித்த உரிமையை அவர்கள் கோருவது இல்லை.

ஒவ்வொருவருக்கும் தண்ணீரை வழங்கவேண்டிய உரிமையை மக்கள் கோராது இருப்பதிலிருந்து மக்களுக்கு குழாய் குடிநீர் தரத்தில் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் வணிகப்பொருளாக மாறியுள்ளது. நாடு முழுவதும் அனுமதி பெற்ற/அனுமதி பெறாத கேன் குடிநீர் எண்ணிக்கையை வைத்தே தண்ணீர் வணிகப் பொருளாக மாறியுள்ளதை அறிந்துகொள்ள முடியும்.

"நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமானதா?” - பூவுலகின் நண்பர்கள் ‘பகீர்’ எச்சரிக்கை!

பொதுவில் கிடைக்கவேண்டிய அடிப்படை வளமான நீர் வணிகப் பொருளாக மாற்றப்பட்டதன் முக்கிய காரணம், அரசு குழாய்களின் மூலம் தரமான குடிநீரை மக்களுக்கு கொண்டு சேர்க்காததுதான்.

கடந்த 2019 நவம்பர் மாதம் Bureau of Indian Standards (BIS) இந்தியாவில் உள்ள பெரும் நகரங்களில் மக்களுக்கு வழங்கப்படும் குழாய் குடிநீரின் தரத்தை சோதித்து ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்விற்காக சென்னையில் 10 இடங்களில் (அயனாவரம், கொளத்தூர், பெரம்பூர், முகப்பேர், கிண்டி, சோளிங்கநல்லூர், அடையார், வேளச்சேரி, தி.நகர், எழும்பூர்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில். சென்னையின் இந்த 10 இடங்களிலும் மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீரே வழங்கப்படுவதும், குடிநீர் தரத்தில் சென்னை இந்தியாவிலே இரண்டாவது மோசமான இடத்தில் இருப்பதும் தெரியவந்தது.

சென்னையில் பரிசோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் Boron, chloride, fluoride, ammonia, Turbidity போன்றவையும், மலேரியா, காலரா, டெங்கு, வயிற்றுப்போக்கு, Hepatitis E போன்ற நோய்த் தொற்றுகளை பரப்பக்கூடிய E-coli, Coliform பாக்டீரியாக்களும் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது.

இப்படி அரசே பாதுகாப்பில்லாத குடிநீரை வழங்கும்போது, Can தண்ணீரையும், RO தண்ணீரையும் எப்படி நெறிமுறைப் படுத்த முடியும் ? மக்களிடையே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடாதா ?

கேன் தண்ணீர் ஆலைகளின் வேலை நிறுத்தத்திற்கு பிறகு பாதுகாப்பில்லாத குழாய் குடிநீரை குடிப்பதினால் மக்களுக்கு நீர் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதினால் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்திருக்கும் பழைய குழாய்கள், கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டிருக்கும் குழாய்கள், துருப்பிடித்திருக்கும் குழாய்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகள், சாக்கடை நீர் குடிநீருடன் கலக்கும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து சரி செய்து மக்களுக்கான பாதுகாப்பான குழாய் குடிநீரை உறுதி செய்யும்படி பூவுலகின் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

RO தண்ணீர் பயன்பாட்டிற்கு விதிமுறைகள் வகுப்பதும், கேன் தண்ணீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து கேன் தண்ணீர் தொழிலை நெறிப்படுத்துதலும் தற்காலிக தீர்வையே தரும். வருங்காலங்களில் Day Zero ஏற்பட்ட பிறகு கேன் தண்ணீர் எடுக்க முடியாது. அப்போது சிந்தித்து பயனிருக்காது, பிரச்னை வருமுன் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசாங்கம் மக்களுக்கு போதுமான குழாய் குடிநீரை பாதுகாப்பானதாக வழங்க நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுகிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories