தமிழ்நாடு

“மீனவர் சமுதாயத்திற்காக இரவு பகலாகப் பணியாற்றிய செயல்வீரர் கே.பி.பி.சாமி” - தி.மு.க தலைவர் இரங்கல்!

தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி மறைவுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மீனவர் சமுதாயத்திற்காக இரவு பகலாகப் பணியாற்றிய செயல்வீரர் கே.பி.பி.சாமி” - தி.மு.க தலைவர் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை திருவொற்றியூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தி.மு.க-வில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய கே.பி.பி.சாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :

“முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி திடீரென்று மறைவெய்தினார் என்ற இதயத்தைக் கலங்கவைக்கும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சுறுசுறுப்பு மிக்க தொண்டராகவும், கழக வளர்ச்சிப் பணிகளில் கள வீரராகவும் செயல்பட்ட கே.பி.பி.சாமி இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில மீனவர் அணி செயலாளர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர்.

மீன்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அவர், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில், அவர்களின் பிரச்னைகளுக்காக முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரிடமும், துணை முதலமைச்சராக இருந்த என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும், “மீனவர் சமுதாயத்தின்” விடிவிளக்காகவும் இருந்தவர். திராவிட இயக்க கொள்கைகளை தன் நெஞ்சில் மீது ஏந்தி எப்போதும் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்த அவர், சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.

“மீனவர் சமுதாயத்திற்காக இரவு பகலாகப் பணியாற்றிய செயல்வீரர் கே.பி.பி.சாமி” - தி.மு.க தலைவர் இரங்கல்!
Admin

இடையில் அவர் உடல் நலம் குன்றியிருந்த போது, அவரை நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்திருக்கிறேன். அந்த நேரங்களில் தன் உடல்நலம் பற்றிக்கூட அக்கறை காட்டாமல், தனது தொகுதி மக்கள் குறித்தும், குறிப்பாக மீனவர் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் என்னிடம் பேசுவார்.

அந்த அளவிற்கு தொகுதி மக்களுக்காகவும், மீனவர் சமுதாயத்திற்காவும் இரவு பகலாகப் பணியாற்றும் ஒரு செயல்வீரரை இந்த தொகுதி மக்கள் இழந்து வாடுகிறார்கள். கழகத்தின் போராட்டங்களை முன்னின்று நடத்திடவும்- உற்சாகமிக்க கழகத் தொண்டர்களை உருவாக்கவும் ஆர்வம் குறையாமல் தொடர்ந்து உழைத்து வந்த கே.பி.பி.சாமியை இழந்து நானும், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மீனவர் சமுதாய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories