தமிழ்நாடு

“சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து ரஜினிக்கு பா.ஜ.க இன்னும் எழுதி தரவில்லை” : ஜவாஹிருல்லா சாடல்!

சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த்திற்கு பா.ஜ.க. எழுதி தரவில்லை. இதனால் வாய் திறக்கவில்லை என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், தாக்குதல் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் போலிஸ் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தி உள்ளது. போராட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்கள், பெண்கள் தாக்கப்பட்டு உள்ளனர். வீடியோக்களை தமிழக முதலமைச்சர் ஆய்வு செய்து தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகள், போலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் ஷாகீன் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் தொடர் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஜனநாயக குரலை நெறிப்பது போல் உள்ளது. வண்ணாரபேட்டையில் போராட்டம் நடத்த முயன்ற போது வேறு இடம் தருவதாக போலிஸார் கூறிய வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

சென்னையில் நடந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த்திற்கு பா.ஜ.க. எழுதி தரவில்லை. அதனால் அவர் வாய் திறக்கவில்லை. அசாமில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 19 லட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை. ரஜினிகாந்த் வசனங்களை வாசிப்பவராக தான் உள்ளார்.

சென்னையில் நடந்த சம்பவம் போல் தமிழக வரலாற்றில் இதுவரை போலிஸ் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில்லை. பெண்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளன. இந்த தாக்குதல் முலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories