தமிழ்நாடு

“சுரணையற்றுப்போய், மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது அ.தி.மு.க அரசு” - தங்கம் தென்னரசு கண்டனம்!

அ.தி.மு.க அரசின் அரசியல் நாடகங்கள் மாணவர்களின் வாழ்க்கையோடு நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

“சுரணையற்றுப்போய், மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது அ.தி.மு.க அரசு” - தங்கம் தென்னரசு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“அ.தி.மு.க அரசின் அரசியல் நாடகங்கள் பார்த்துப் பழகியவை. ஆனால் பள்ளிக் கல்வித்துறையில் நடத்துவது மாணவர்களின் வாழ்க்கையோடு நடக்கிறது. இதனை வேடிக்கை பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சரும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

“ 'நீட்' தேர்வு என்ற பலிபீடத்தை உருவாக்கி மாணவர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்த மத்திய, மாநில அரசுகள் இப்போது பள்ளி மாணவ, மாணவியரின் தொடக்கக் கல்விக் கனவையும் சிதைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். மத்திய அரசு அமல்படுத்தத் துடித்து, மாநில அரசின் ஒப்புதலோடு அமலாக இருக்கும் 5-வது மற்றும் 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறை என்பது ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை கல்விச் சாலைக்குள் நுழைய விடாமலும், நுழைந்தவர்களையும் திட்டமிட்டு வெளியேற்றும் சதிச்செயலின் வெளிப்பாடு என்பதை தி.மு.க தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிக்கைகள் தமிழ்ச் சமூகத்தின் மாணவர்கள் நலனை உள்ளடக்கியதாகவும் இந்நாட்டின் சமூக நீதியின் குரலாகவும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டு வருகிறது. இந்த அறிக்கைகள் மூலம் பாடம் கற்றுக் கொள்ளாத தமிழக அரசு தொடர்ந்து தனது அக்கறையின்மை மூலமாக தமிழக மாணவர் சமுதாயத்துக்கு எத்தகைய படுகுழியைத் தோண்டுகிறோம் என்ற ஆபத்தை உணராமல் செயல்பட்டு வருகிறது.

“சுரணையற்றுப்போய், மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது அ.தி.மு.க அரசு” - தங்கம் தென்னரசு கண்டனம்!

மத்திய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அடித்தட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் தனது வர்ணாசிரம தர்ம எண்ணத்தோடு கல்வித்துறையின் பாடத்திட்டம் முதல் கல்வித்துறையின் சட்டதிட்டம் வரை மாற்றி வருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்ற குலதர்மம் நோக்கிச் சென்று கொண்டுள்ளது.

அத்தகைய மத்திய பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கையை அப்படியே அடிமைத்தனமாக நகல் எடுத்து அட்சரம் பிசகாமல் அ.தி.மு.க அரசும் செயல்படுத்தி வருகிறது. அண்ணாவின் பெயரால், திராவிடம் என்ற பெயரையும் தாங்கிய கட்சி என்ற சுரணையே இல்லாமல் முதுகுகாட்டி நிற்கிறது அ.தி.மு.க அரசு. இதனால் பல லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அக்கறை சிறிதும் இவர்களுக்கு இல்லை.

5-வது மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த தகவல் வந்ததுமே தமிழக சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். 'புதிய கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் மாநில அரசு பொதுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்கும்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிமொழி அளித்தார்.

“சுரணையற்றுப்போய், மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது அ.தி.மு.க அரசு” - தங்கம் தென்னரசு கண்டனம்!

சட்டப்பேரவையில் சொன்னதற்கு மாறாக, பள்ளிக் கல்வித்துறை நடந்து கொண்டது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், '2018-19ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 5-வது வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது' என்று சுற்றறிக்கை வெளியிட்டார்கள். உடனே இதுபற்றி அமைச்சரிடம் கேட்டதும், “பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் அரசாணை வெளியிடவில்லை” என்று சொல்கிறார். அமைச்சரோ அல்லது முதல்வரோ சொல்லாமல் அரசு அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப முடியுமா? முடியாது. இது முதல் நாடகம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதும், 'தமிழகத்துக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளோம்' என்று அமைச்சர் செங்கோட்டையன் சொன்னார். ஆனால் 5-வது மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வந்தது. அதன்பிறகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

செங்கோட்டையனின் அடுத்த நாடகம் அரங்கேறியது. 'மத்திய அரசின் முடிவுப்படியே இந்த பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்தும்' என்றார் அமைச்சர். 'யாரையும் ஃபெயில் செய்ய மாட்டோம்' என்று சொன்னார் அமைச்சர்.

“சுரணையற்றுப்போய், மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது அ.தி.மு.க அரசு” - தங்கம் தென்னரசு கண்டனம்!

இந்த நிலையில் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 5-வது மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து, அந்த மாணவர்களின் அனைத்து விவரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள், 5-வது மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் விவரங்களைச் சேகரித்து கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றத் தொடங்கினார்கள். திடீரென்று, 5-வது மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அவரவர் பள்ளியில் இல்லாமல் வேறு பள்ளிகளில் நடத்தப்படும் என்றார்கள். அதற்கு எதிர்ப்பு வந்ததும், அவரவர் பள்ளியில் எழுதலாம் என்றார்கள்.

தேர்வுக்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்கள். அதற்கு எதிர்ப்பு வலுத்ததும், பள்ளிகளே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தும் என்றார்கள். 'தேர்வு நடத்துவோம், ஆனால் தேர்ச்சியை அறிவிக்க மாட்டோம்' என்று சொன்னார்கள். எத்தனை நாடகங்கள். அ.தி.மு.க அரசின் அரசியல் நாடகங்கள் பார்த்துப் பழகியவை. ஆனால் பள்ளிக் கல்வித்துறையில் நடத்துவது மாணவர்களின் வாழ்க்கையோடு நடக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. இதனை வேடிக்கை பார்க்க முடியாது”.

இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories