தமிழ்நாடு

“முதலில் 17 வாக்குகள்.. பிறகு 2... கடைசியில் அ.தி.மு.க வேட்பாளர் வென்றதாக அறிவிப்பு” - கரூரில் முறைகேடு!

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து அ.தி.மு.க வேட்பாளரை வெற்றி வேட்பாளராக அறிவித்ததால், போராட்டம் நடைபெறுகிறது.

“முதலில் 17 வாக்குகள்.. பிறகு 2... கடைசியில் அ.தி.மு.க வேட்பாளர் வென்றதாக அறிவிப்பு” - கரூரில் முறைகேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் நியாயமாக வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆளும் கட்சியினர் அ.தி.மு.க வேட்பாளரை வெற்றி வேட்பாளராக அறிவித்ததால், செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, ஜோதிமணி எம்.பி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லோகநாயகி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.கவைச் சேர்ந்த கலையரசி என்பவரை விட 17 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் இந்த வெற்றியை அறிவிக்காத தேர்தல் அலுவலர்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு தபால் வாக்கு என்ற பெயரில் 17 வாக்கு வித்தியாசத்தை 5 வாக்குகளாக குறைத்தனர். அதன் பின் எண்ணப்பட்டதில் தவறு உள்ளது எனக் கூறி 5 வாக்கு வித்தியாசத்தை 2 வாக்குகள் வித்தியாசம் என்ற நிலைக்குக் கொண்டு வந்தனர்.

அதன் பிறகும் முடிவுகளை அறிவிக்காமல் காலந்தாழ்த்தி இன்று அதிகாலை 3.30 மணியளவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகிக்கு பதிலாக அ.தி.மு.க வேட்பாளர் கலையரசி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

“முதலில் 17 வாக்குகள்.. பிறகு 2... கடைசியில் அ.தி.மு.க வேட்பாளர் வென்றதாக அறிவிப்பு” - கரூரில் முறைகேடு!

இதனால், ஆத்திரமடைந்த காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் 3.30 மணியில் இருந்து வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, ஜோதிமணி எம்.பி ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தலைமையில் தற்போது கரூர் பரமத்தி சாலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories