தமிழ்நாடு

’பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம்’ : மாணவர் எழுச்சியைக் கொச்சைப்படுத்தி பேசிய ஒய்.ஜி மகேந்திரன்

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கொச்சப்படுத்தி பேசிய ஒய்.ஜி. மகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

’பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம்’ : மாணவர் எழுச்சியைக் கொச்சைப்படுத்தி பேசிய ஒய்.ஜி மகேந்திரன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்லாமியர்கள் இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத்தில் மேற்கொண்டுள்ள திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சியினர் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், போராட்டக்காரர்களுக்கு மத்தியில் சமூக விரோதிகளை ஏவி கலவரத்தை ஏற்படுத்தி வன்முறையை கட்டவிழ்த்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கு ஊதுகுழலாக அவை ஆளும் மாநில அரசுகளும் செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும் போலிஸாரின் வன்முறைகளை மீறியும் மாணவர்கள் இதுகாறும் அறவழியிலும், ஜனநாயக ரீதியிலும் குடியுரிமை சட்டத்திருத்ததை வாபஸ் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு சான்றாக, டெல்லியில் ஜாமியா மாணவர்களுக்கு எதிராக தடியடியில் ஈடுபட்ட போலிஸாருக்கே ரோஜா பூக்களை கொடுத்து அகிம்சை முறையில் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பெண்களை கவர்வதற்காகவும், வகுப்புகளைப் புறக்கணிக்கவுமே மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்குமே வன்முறை தீர்வாகாது. அந்த வன்முறையை கையாண்டிருந்தால் காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்க முடியாது” என கூறியிருந்தார்.

சமூக நலனுக்காகவும், ஒட்டுமொத்த மக்களின் உரிமைக்காவும் போராடி வரும் மாணவர்களிடையே ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த பேச்சு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுவரை நடந்த வன்முறைகள் அனைத்தும் ஆட்சியாளர்களாலேயே நடத்தப்பட்டது என ஒய்.ஜி.மகேந்திரன் அறிந்திருக்கவில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதோடு அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் சமயங்களில், அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பா.ஜ.க ஆதரவு பிரபலங்கள் பேசுவதை வாடிக்கையாகவே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories