குமரிக்கடல் ஒட்டியுள்ள வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், 40-50 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி ஒட்டிய கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை தலைஞாயிறில் 16 செ.மீ, புதுக்கோட்டையில் 14 செ.மீ, திருவாரூர் குடவாசலில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.