தமிழ்நாடு

மாற்றி மாற்றிப் பேசிய எடப்பாடி தரப்பு... மருத்துவர்களின் போராட்டத்தை திசைதிருப்பி முடித்துவைத்த அரசு!

மருத்துவர்களின் நியாயமான போராட்டத்தைத் திசைதிருப்பி, தற்போது முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது எடப்பாடி அரசு.

மாற்றி மாற்றிப் பேசிய எடப்பாடி தரப்பு... மருத்துவர்களின் போராட்டத்தை திசைதிருப்பி முடித்துவைத்த அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு மருத்துவர்களின் போராட்டம் ஒரு வார காலத்திற்குப் பிறகு அமைச்சரின் தொடர் மிரட்டல் காரணமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில தினங்களில் கொடுத்த பேட்டிகளில் தொடர்ந்து சொல்லிவந்தனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த மருத்துவர்கள் போராட்டதின்போது அமைச்சர் அளித்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களின் சாதகமான கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும், 6 வார காலத்திற்குள் முடிவு எட்டப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் கடந்த 25ம் தேதி மருத்துவர்கள் தொடங்கிய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முன்வராமல் பல பொய்களை முதல்வரும், அமைச்சரும் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் 10 சதவீதம் பேர் மட்டும் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பொய்யான தகவலை தெரிவிதனர். மருத்துவர்கள் மீது மக்களுக்கு கோபம் திரும்பவேண்டும் என்பதற்காக போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பிரச்னையை திசை திருப்பவும் முயன்றது அரசுத் தரப்பு.

6 வாரத்தில் முடிவு எட்டப்படும் என்ற தமிழக அரசின் வாக்குறுதியை நம்பித் தான் மருத்துவர்கள் ஆகஸ்ட் மாதம் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கையை இப்போதே நிறைவேற்ற வேண்டும் என்று அரசை நிற்பந்திக்கிறார்கள் என்று சொல்கிறார்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று யாரும் ஏற்கமுடியாத பொய்யைத் திணிக்கிறார். அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர்களை பழிவாங்கும் நோக்கி இரண்டு பணிமாறுதல்கள் வழங்கி இருப்பதை மறுக்கமுடியுமா என்று மருத்துவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று சொன்ன அரசு தற்போது நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்று தங்களின் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறது. மருத்துவர்களின் நியாயமான போராட்டத்தைத் திசைதிருப்பி, தற்போது முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது எடப்பாடி அரசு.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories