தமிழ்நாடு

இரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதல் : 3 பேருக்கு அரிவாள் வெட்டு - புதுச்சேரி அருகே பதட்டம்!

புதுச்சேரி அருகே இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மீனவர்கள் நடுக்கடலில் மோதிக் கொண்டனர்.

இரு கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதல் : 3 பேருக்கு அரிவாள் வெட்டு -  புதுச்சேரி அருகே பதட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

புதுச்சேரி அருகே உள்ளது வீராம்பட்டினம் மீனவர் கிராமம். இந்த கிராம மீனவர்கள் அருகில் உள்ள நல்லவாடு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அந்தப்பகுதி மீனவர்களுடன் மோதல் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து நடுக்கடலிலேயே இருதரப்பு மீனவர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதன்பின்னர், வீராம்பட்டினம் மீனவர்கள் தங்கள் கிராமத்திற்கு வந்து நடந்ததை கூறியுள்ளனர்.

ஆத்திரமடைந்த கிராம மக்கள், இன்று காலை படையாகத் திரண்டு படகுகளில் நல்லவாடு கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த மீனவர்களை கத்தி, சுளுக்கி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். பதிலுக்கு நல்லவாடு மீனவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் நல்லவாடு பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் புதுச்சேரி பொதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்ததும், புதுச்சேரி போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இருதரப்பினரையும் கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக வீராம்பட்டினம்- நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இருகிராமங்களிலும் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories