தமிழ்நாடு

“தலைக்கவசம் வாகன ஓட்டிகளுக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா?” - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி!

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் கடந்த ஆண்டைவிட 91 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தலைக்கவசம் வாகன ஓட்டிகளுக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா?” - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி வழக்கறிஞர் கே.கே.ராஜேந்திரன் தொடர்ந்த பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட வாரியாக பதிவான விபத்து விபரம் குறித்தும், ஹெல்மெட் அணியாததால் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய கடந்தமுறை உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு பிரிவின் உதவி ஐ. ஜி சாம்சன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகம் முழுதும் கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை ஹெல்மெட் அணியாததால் 22.65 லட்சம் நபர்கள் மீது வழக்கு பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி 43.31 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு எண்ணிக்கை 20 லட்சம் அதிகரித்து 91 சதவிகிதம் அதிகம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தலைக்கவசம் வாகன ஓட்டிகளுக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா?” - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி!

அதே போல கடந்தாண்டு 2018 ஆகஸ்ட் வரை, ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,337 ஆகவும் இருந்தது. ஆனால் 2019 ஆகஸ்ட் மாதத்தை பொறுத்த வரையில் ஹெல்மெட் அணிந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆகவும், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,376 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருசக்கர வாகன விபத்தால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை கடந்தாண்டு ஆகஸ்ட் வரை 4,457 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3,677 ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறையில் 8,477 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி எழுத்து தேர்வுகள் முடிந்துள்ளதாகவும், அனைத்து நடைமுறையும் முடிந்த பின்னர் இந்த ஆண்டுக்குள் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தலைக்கவசம் வாகன ஓட்டிகளுக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா?” - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி!

இதனையடுத்து, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு வழக்குத் தொடர்பாக பேசிய போது, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களை விட வாகனத்தில் உள்ள பெட்ரொல் டேங்குகள் தான் அதிகமாக ஹெல்மெட் அணிவதாக அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், வட சென்னையில் ஜிஏ சாலை, பிராட்வே, பேசின் பிரிட்ஜ் சாலை போன்ற இடங்களில் ஹெல்மெட் சோதனை முறையாக நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஹெல்மெட் வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் பேசுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பார்த்துகொள்வார்களா என காட்டமாக கேள்வி எழுப்பினர்.

அதேபோல, ஸ்விக்கியில் பணிபுரிபவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்றும் அவர்கள் சாலையில் தவறான வழியில் அதிகளவில் வாகனத்தை ஓட்டுவதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் கருத்து தெரிவித்தனர். இறுதியில் ஹெல்மெட் வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து ஹெல்மெட் சோதனையை தொடர்ந்து நடத்தவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.

banner

Related Stories

Related Stories