தமிழ்நாடு

“வேலையும் வாங்கித் தரல... பணமும் தரல...” - லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை கடத்தி தாக்கிய கும்பல்!

பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராததால். வாலிபர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் செல்ல முயன்று போலிஸில் சிக்கியுள்ளனர்.

“வேலையும் வாங்கித் தரல... பணமும் தரல...” - லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை கடத்தி தாக்கிய கும்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோயம்பேடு அருகே நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த வாலிபர் கூச்சலிட்டதால் உடனடியாக அருகில் இருந்த போக்குவரத்து போலிஸார் அந்த கும்பலை மடக்கிப் பிடித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடத்தப்பட்ட வாலிபர் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை, நாவல்பூரைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் (26) என்பது தெரியவந்தது. காயமடைந்த விஷ்ணு பிரசாத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஷ்ணு பிரசாத் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்றுள்ளார். அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் தலைமறைவாக இருந்து வந்த விஷ்ணு பிரசாத் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே வந்தபோது கடத்தப்பட்டுள்ளார்.

விஷ்ணு பிரசாத்திடம் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்களான அரவிந்த், ஜானகிராமன், பாபுஜி உள்ளிட்ட 8 பேர் கும்பல் அவரைக் கடத்தி வந்து கோயம்பேட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் அடைத்து வைத்து சரமாரியாக அடித்து உதைத்து, பின்னர் விஷ்ணு பிரசாத்தின் தந்தைக்கு போன் செய்து பணத்தைத் திருப்பி கொடுத்தால் உங்கள் மகனை ஒப்படைத்து விடுவதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து இராணிப்பேட்டை போலிஸில் தனது மகன் கடத்தப்பட்டதாக அவர் புகார் அளித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பணத் தகராறில் வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் கோயம்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories