தமிழ்நாடு

தஹில் ரமாணியை மேகாலயாவுக்கு பணியிட மாற்றம் செய்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்த தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தஹில் ரமாணியை மேகாலயாவுக்கு பணியிட மாற்றம் செய்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி தஹில் ரமாணி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து தஹில் ரமாணி நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை.

இந்த நிலையில், தஹில் ரமாணியின் இடமாற்ற பரிந்துரைக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் கற்பகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணிமாற்ற முடிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் இடமாற்றம் செய்யப்படுகிறதா?

ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி தஹில் ரமாணியை வேறொரு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்வது ஏன்? தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்காவிட்டாலும் இடமாற்றம் செய்யமுடியுமா?

பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து மனுத்தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் கற்பகம்.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றத்தை நாடாமல், உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதித்துறை உத்தரவை பிறப்பிக்கவில்லை எனவும், அது நிர்வாக உத்தரவு என்பதால் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து பதிவுத்துறை பட்டியலிட்ட பின்னர் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories