திருத்தணியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி - அரக்கோணம் சாலையில் 35 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தீடிரென அவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதால் ஓடத் தொடங்கிய அவர், அருகிலிருந்த உணவகத்திற்குள் நுழைந்துள்ளார். உணவகத்திற்குள் பின் தொடர்ந்த அந்த கும்பல், சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் கண் முன்னே, அந்த இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனைக்கண்டு அங்கு உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்துள்ளது. கைப்பந்து விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..








