தமிழ்நாடு

பா.ஜ.க தொடர்பாக பதிவிட்டதால் வேலையை இழந்த பத்திரிகையாளர்கள் : தமிழக ஊடகங்களிலும் ‘காவி’ பயங்கரவாதம் ? 

பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்த நிறுவனங்களின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பா.ஜ.க தொடர்பாக பதிவிட்டதால் வேலையை இழந்த பத்திரிகையாளர்கள் : தமிழக ஊடகங்களிலும் ‘காவி’ பயங்கரவாதம் ? 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சமீபகாலமாக, தமிழக ஊடகங்களில் பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்தங்களை விமர்சித்து எழுதுவோரை திட்டமிட்டு பணிநீக்கம் செய்யும் வேலை அரங்கேறி வருகிறது. இந்த நடவடிக்கையை எதிர்த்து ‘மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்’ கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் தங்களின் சொந்த அரசியல் விருப்பங்களை, பொதுவெளியில் வெளிப்படுத்துவதற்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன. கடந்த சில மாதங்களில், சமூக வளைதளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்ட பத்திரிகையாளர்கள் பலர், பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

ஆனந்த விகடன் பத்திரிகையில், லே அவுட் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றிய நட்ராஜ் என்பவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில், எந்த வித உள்நோக்கமும் இல்லாமல், அத்திவரதர் குறித்து பதிவிட்டுள்ளார். இதை காரணம் காட்டி நட்ராஜை விகடன் குழுமம் பணி நீக்கம் செய்துள்ளது. வெளியிலிருந்து ஒரு சிலர் கொடுத்த நெருக்கடி காரணமாகவே விகடன் குழுமம் இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது.

நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் இணையதள பிரிவில் பணியாற்றிய இரண்டு பேரை அந்த நிறுவனம் சமீபத்தில் பணிநீக்கம் செய்துள்ளது. அவர்களில் ஒருவர் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தெரிவித்த கருத்தை நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிட்டதற்காக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளை இணையத்தில் பதிவிடுவதே அவருடைய முதன்மையான பணி என்றபோதும், பாமக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, நியூஸ் 7 நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. அதேபோல் மற்றொருவர் பல மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பதிவிட்டதை காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் தொலைகாட்சியில் தலைமை படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆனந்த் என்பவர், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக முகநூலில் இடப்பட்ட பதிவுகளை ஆனந்த் “லைக்” செய்தார் என்பதே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதன் காரணமாகவே அவரை பணிநீக்கம் செய்ததாக நிர்வாகம் அவரிடம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், காவேரி தொலைகாட்சியின் ஆசிரியரும், தமிழ் பத்திரிகையுலகில் அனைவராலும் மதிக்கப்படும் மூத்த பத்திரிகையாளரான ஜென்ராம் எந்த வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பா.ஜ.க தொடர்பாக பதிவிட்டதால் வேலையை இழந்த பத்திரிகையாளர்கள் : தமிழக ஊடகங்களிலும் ‘காவி’ பயங்கரவாதம் ? 

அந்த தொலைகாட்சியில் பணியாற்றும், மதன் என்ற நெறியாளர், சமீபத்தில் சுப.வீரபாண்டியனை நேர்காணல் செய்துள்ளார். அந்த நேர்காணலில், ஊடக அறத்தை மீறி தந்தை பெரியாரை கொச்சை படுத்தும் வகையில் மதன் சில கேள்விகளை கேட்டுள்ளார். அந்த தொலைகாட்சியின் ஆசிரியர் என்ற வகையில் அந்த நேர்காணல் குறித்து ஜென்ராம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், அங்கு பணியாற்றும் மேலும் சிலரும், அந்த நெறியாளரை விமர்சித்துள்ளனர். காவேரி தொலைகட்சி நிர்வாகம் அறம் தவறிய அந்த நெறியாளரை கண்டிக்காமல், நெறியாளரை விமர்சனம் செய்தவர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது.

இதற்கு ஜென்ராம் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த நெறியாளருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்ததாலும், காவிரி நிர்வாகம் ஜென்ராமை பணிநீக்கம் செய்துள்ளது. எதிர் கருத்து தெரிவித்த மற்றவர்களையும் பணிநீக்கம் செய்ய முனைப்பு காட்டி வருகிறது. அவர்களில் சிலரை அழைத்து நீங்களே பணியிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள், சமீப காலமாக அரசியல் கட்சியினர் கொடுக்கும் நெருக்கடிக்கு பணிந்து பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது.

ஊடகத்தை நடத்தும் முதலாளிகள், அவர்கள் ஈடுபட்டுள்ள மற்ற தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள, ஊடக சுதந்திரத்தை அரசியல் கட்சிகளிடம் அடகு வைத்து வருகின்றனர்.இதன் காரணமாகவே அவர்கள் இழுக்கும் இழுப்பிற்கெல்லாம் இசைவு தெரிவித்து, பத்திரிகையாளர்களை பழிவாங்கி வருகின்றன.

இந்த போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் எந்த ஊடகத்தில் என்ன செய்தி வர வேண்டும், அது எப்படி வர வேண்டும் என்பதை ஊடகத்திற்கு வெளியே இருப்பவர்களே முடிவு செய்யும் நிலை ஏற்படும். இது ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கேடாக முடியும்.

ஆகவே, பிற்போக்கு அரசியல் சக்திகள் கொடுக்கும் நெருக்கடிக்கு பணிந்து, பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்த நிறுவனங்களின் நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. பணிநீக்கம்செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கம் உடனே பணி வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து, ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதுடன், வேலையிழந்த பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

ஜனநாயகத்தையும், கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்க நினைக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து, ஊடகத்துறையின் இந்த போக்கை கண்டிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories