தமிழ்நாடு

கிரண் பேடி கருத்துக்கு வலுத்த எதிர்ப்பு : வறட்சி பற்றியது தன் கருத்து அல்ல என பின்வாங்கல்!

தமிழக மக்கள் குறித்த தனது கருத்துக்கு வலுத்த எதிர்ப்பைத் தொடர்ந்து, மக்களின் கருத்தையே நானும் பதிவிட்டிருந்தேன் என்று கிரண் பேடி பின்வாங்கியுள்ளார்.

கிரண் பேடி கருத்துக்கு வலுத்த எதிர்ப்பு : வறட்சி பற்றியது தன் கருத்து அல்ல என பின்வாங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நிலவிவரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தமிழக மக்களை சுயநலம் மிகுந்தவர்கள்; கோழைகள் என விமர்சித்தது தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

கிரண்பேடியின் இந்தக் கருத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். இதையடுத்து, இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்து விட்டார்களே என்ற ஒரே எரிச்சலில் அன்பும்,அறநோக்கமும், வீரமும் நிறைந்த தமிழக மக்களைப் பார்த்து “கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள்” என்று புதுவை துணை ஆளுநர் கூறியிருப்பது ஆணவத்தின் வெளிப்பாடு.

தமிழக மக்கள் மீது கண்ணியக்குறைவான விமர்சனம் செய்த புதுவை துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவர் ஒரு நிமிடம் கூடத் தாமதம் செய்யாமல் திரும்பப் பெற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தமிழர்கள் குறித்து அவதூறாகப் பேசிய கிரண் பேடியைக் கண்டித்து புதுச்சேரியில் போராட்டம் நடத்தப்படும் எனவும், தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் புதுச்சேரி தி.மு.க அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை வறட்சி தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. மக்களின் கருத்தையே நானும் பதிவிட்டிருந்தேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி விளக்கமளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories