தமிழகம் முழுவதும் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் யாகம், பிரார்த்தனை என மக்களை ஏமாற்றி வருகிறது எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி அ.தி.மு.க அரசின் அலட்சிய போக்கைக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் தி.மு.கவினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை தெற்கு மாவட்டப் பகுதியான சோழிங்கநல்லூரில், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரான மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பிரச்னை ஏற்படுவதற்கு முன்பு, குடிமராமத்து பணி செய்வதற்குப் பதில் தற்போது மழை வரும் சமயத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணியை மேற்கொள்ள இருக்கிறோம் என அ.தி.மு.க அரசு தெரிவித்திருப்பதன் மூலம் அந்த நிதி ஒழுங்காக செலவிடப்படுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது என செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதேபோல், சென்னை ஆதம்பாக்கத்தில் குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, மதுரை திருப்பரங்குன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிளில் பேரணியாகச் சென்றனர்.
மேலும், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. நாகை வடக்கு மாவட்டம் தி.மு.கழகத்தினர் சார்பில் பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.








