தமிழ்நாடு

அரசு பணியில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீடு மூன்றாம் பாலினத்தவர்க்கும் பொருந்தும்-தமிழக அரசு

அரசு வேலைவாய்ப்பில், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசு பணியில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீடு மூன்றாம் பாலினத்தவர்க்கும் பொருந்தும்-தமிழக அரசு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி எனும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி பிரிவாக பிரித்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தமிழக சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி நலவாரியம் துவங்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதிச் சான்று இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக கருதி இடஒதுக்கீடு வழங்க 2017ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் விண்ணப்பிக்கும் வகையில் 2015ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகையை வழங்கவும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வகை செய்யும் வகையிலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, வழக்கின் விசாரணையை ஜூலை 17க்கு தள்ளிவைத்தது.

banner

Related Stories

Related Stories