தமிழ்நாடு

நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ1 கோடி இழப்பீடு வேண்டும் - திருமாவளவன்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் எம்.பி திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ1 கோடி இழப்பீடு வேண்டும் - திருமாவளவன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அந்நிறுவனத் தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது," நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தமிழகத்தில் இதுவரை மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழக மாணவர்களின் உயிர்களை இனிமேலும் காவு வாங்காமல் இதிலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும். அதற்கு தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நீட் நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்களின் 49 சதவீதத்தினர்தான் தேர்ச்சிபெற்றனர். சுமார் 75,000 பேர் இந்தத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அப்படி தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவிகள் 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டேபோகிறது.

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில் நாடு முழுவதற்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதென்பது ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதமான பாடத் திட்டங்களைப் பின்பற்றி வரும் சூழலில் மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது பிற வாரியங்களில் பயிலும் மாணவர்களுக்கு எதிராக உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டுக்கு எதிரானதாகும். இந்தப் பாகுபாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ1 கோடி இழப்பீடு வேண்டும் - திருமாவளவன்

நீட் தேர்வு செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்னர் அதே நீதிமன்றமே ரத்து செய்து நீட் தேர்வை நடத்தும்படிக் கூறியது. அந்தத் தேர்வு நடத்தப்படுவதில் ஒவ்வொரு ஆண்டும் நேரும் பல்வேறுவிதமான கோளாறுகளை சுட்டிக்காட்டிய பிறகும், வழக்குகள் தொடுக்கப்பட்ட பிறகும் உச்சநீதிமன்றம் தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள மறுத்துவருகிறது. மத்திய அரசின் கையில் அதிகாரங்களைக் குவிப்பதற்கு உச்சநீதிமன்றமே வழிவகுப்பது நீதிபரிபாலன முறையின்மீதே நம்பிக்கை இழக்கச்செய்கிறது. இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நீட் தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தத்தைத் தரவேண்டும். நீட் தொடர்பான மரணங்களுக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம். இனியாவது பாஜக அரசு தனது தவறை உணர்ந்து தமிழ்நாட்டுக்குத் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories