தமிழ்நாடு

போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறையினர் காவல்துறைக்கே லாயக்கில்லை! : ஆர்.நல்லகண்ணு ஆவேசம்

மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறையினர் காவல்துறைக்கே லாயக்கில்லை என்று முகிலனை கண்டுபிடிக்காத தமிழக அரசை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது பேசியுள்ளார் ஆர்.நல்லகண்ணு.

போராட்டங்களை ஒடுக்கும்  காவல்துறையினர் காவல்துறைக்கே லாயக்கில்லை! : ஆர்.நல்லகண்ணு ஆவேசம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலனை இதுவரை கண்டுபிடிக்காத தமிழக அரசைக் கண்டித்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கண்டன உரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது

“ஒரு தனிமனிதனுக்கு இங்கே சுதந்திரம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை படுகொலை குறித்த ஆதாரங்களை வெளியிட்ட பின்னர் முகிலன் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. நிதானமாக மக்களைத் திரட்டி அமைதியாக போராட்டம் நடத்தியவர் முகிலன். அவருக்கே இந்த கதி. ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இது நாடா? எங்கு பேச்சுச் சுதந்திரம் இருக்கிறது? எங்கு எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது? மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறையினர் காவல்துறைக்கே லாயக்கில்லை” என்றார்.

மேலும் பேசிய அவர், தேர்தல் நடக்கிறது என்ற காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும் என்றார். முகிலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர், உண்மை தெரியாத பட்சத்தில் போராட்டத்தை தொடருவோம் எனத் தெரிவித்தார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார் ஆர்.நல்லகண்ணு. அப்போது, “மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக்தக்கது; தாய்மொழி தான் அவசியம், அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories