தமிழ்நாடு

அயோத்திதாசர் வழியில் சனாதனத்தை வேரறுக்க சனநாயகத்தை வென்றெடுக்க உறுதியேற்போம்! திருமாவளவன்

அயோத்திதாசர் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்கிற கொள்கைப் புரிதலுடன் சனாதன எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியவர். அவர் வழியில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்! என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அயோத்திதாசர் வழியில் சனாதனத்தை வேரறுக்க சனநாயகத்தை வென்றெடுக்க உறுதியேற்போம்! திருமாவளவன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

பண்டிதர் அயோத்திதாசர் நினைவைப்போற்றும் வகையில் மே 20ம் தேதி இன்று மாலை 5 மணியளவில் விசிக தலைமையகத்தில் பிறந்தநாள் விழா ஒருங்கிணைக்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது;

பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்மண்ணில் தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு போற்றுதலுக்குரியதாகும். தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு முன்தோன்றிய மூத்த தலைவர் அவர். அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற தளங்களில் அவர், அம்பேத்கர் பெரியார் ஆகியோருக்கு முன்னோடியாக இருந்து மாற்றுச் சிந்தனைகளை – முற்போக்கு கருத்துக்களை முன்வைத்தவர். அவர் நெடுங்காலமாக வரலாற்றில் மறக்கப்பட்டவராக அல்லது மறைக்கபட்டவராக ஆக்கப்பட்டிருக்கிறார். எனினும், வரலாற்றால் முற்றிலும் புறந்தள்ள இயலாதவராய் இன்று ஒரு மாபெரும் ஆற்றலாக உயர்ந்து நிற்கிறார்.

மிகச்சிறந்த பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய அவர், தமிழக அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் ஆதிபௌத்தத்தை மீளுருவாக்கம் செய்த களப்பணியாளராகவும் விளங்கியிருக்கிறார். திராவிட மகாஜன சபையை உருவாக்கி தென்னிந்திய மொழிகள் சார்ந்த உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை மீட்கும் வகையில் கருத்துப்பரப்பலை மேற்கொண்டவர். ஒரு பைசா தமிழன் என்னும் பத்திரிக்கை தொடங்கி அதன்மூலம் மாபெரும் கருத்தியல் போரை நடத்தியவர். சாதிஒழிப்பே மக்கள் விடுதலை என்கிற கொள்கைப் புரிதலுடன் சனாதன எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியவர்.

அவருடைய கருத்தியல் தாக்கம் இன்றைய இளந்தலைமுறையினர் வரையில் வீரியத்துடன் நீட்சிபெற்றுள்ளதைக் காணமுடிகிறது. அதற்குச் சான்றாக விடுதலைச்சிறுத்தைகளும் அவரது புரட்சிகர சிந்தனைகளின் வழி செயல்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அவர்வழியில் சனாதனத்தை வேரறுக்க சனநாயகத்தை வென்றெடுக்க அவரது பிறந்தநாளில் (மே20) உறுதியேற்போம். என அவர் அதில் தெரிவித்திருந்தார்

banner

Related Stories

Related Stories