தமிழ்நாடு

7-வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் : 2 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

7-வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் :  2 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் சமுசிகாபுரம் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.

2016-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் 3-ம் ஆண்டு கூலி உயர்வை தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கவில்லை என கடந்த மார்ச் மாதம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற போராட்டம் 6 நாட்களாக நீடித்தது. பிறகு பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி தற்போது வரை 3 வருட கூலி உயர்வு, விடுமுறை ஊதியம் மற்றும் புதிய கூலி உயர்வு நிர்ணயம் செய்வது தொடர்பாக எந்த நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த தொழிலாளர்கள் 4-ம் தேதி முதல் கோரிக்கையை நிறைவேற்றாத நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த போராட்டம் 7 வது நாளாக நீடிகிறது.

பின்னர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அதிகாரிகள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர், தாசில்தார் , கைத்தறி துறை அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள், மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், சிறு விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதில் இரண்டு மணி நேரமாக நடைபெற்ற முத்தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தால் விருதுநகரில் 600-க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு மட்டும் 50 லட்ச ரூபாய் மதிப்பில் மருத்துவ துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2000-க்கும் மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

“நியாயமாக கோரிக்கையை முன்வைத்து போராடும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வேலையை ஆளும் அரசு செய்துதரவேண்டும்” என்று தொழிலாளர் ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.
banner

Related Stories

Related Stories