சென்னையின் முக்கியமான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில், மெட்ரோ ரயில் சேவைக்கான பாதி வழித்தடம் சுரங்கத்தில் இருக்கிறது. ஆயிரம் விளக்கு மற்றும் எல்.ஐ.சி.யை இணைக்கும் மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்காக, 2012ஆம் ஆண்டில், அண்ணா சாலையின் ஒரு பகுதி, ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.
இதனால் எல்.ஐ.சி.யில் இருந்து ஆயிரம் விளக்கு மசூதியை அடைய இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு GP மற்றும் ஒயிட்ஸ் சாலை வழியாகத் தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.ஆனால் ஆயிரம் விளக்கில் இருந்து எல்.ஐ.சி.க்கு அண்ணா சாலையில் பயணிக்க முடியும். இதன் காரணமாக ஜிபி மற்றும் ஒயிட்ஸ் சாலையில் ஆங்கங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியுறும் சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில் எல்.ஐ.சி. மற்றும் ஆயிரம் விளக்கில் பணிகளை முடித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், சாலையை மீண்டும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தச் சாலையில் போக்குவரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மே மாதம் முதல் வாரத்தில் இருவழிச்சாலையாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆண்டுக்குப் பின் மீண்டும் அந்த வழித்தடம் இரு வழிப்பாதை ஆகவுள்ளதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.