மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (23.6.2025) சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானம் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம், குத்துச்சண்டை உள்விளையாட்டு அரங்கம், சக்கர சறுக்கு விளையாட்டு பகுதி, கால்பந்து திடல், கையுந்து பந்து திடல், பார்வையாளர் மாடம், கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்கான வலைகூடம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விளையாட்டுத் திடலை பயன்படுத்தும் பொது மக்களுக்காக, உடைமாற்றும் அறையுடன் கூடிய ஒப்பனை அறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நிர்வாக அலுவலகம், முதலுதவி அறை, 28,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிப்பறை வசதி மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், வட்டார துணை ஆணையர் திரு.கட்டா ரவி தேஜா,இ,ஆ.ப., அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.