ஐரோப்பிய காலனியாதிக்கத்தில் தென்னாபிரிக்கா பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது. ஐரோப்பாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் அனைத்தும் வந்துசெல்லும் இடமாக இருந்த தென் ஆப்பிரிக்காவில் ஏராளமான பிரிட்டன் குடிமக்கள் குடிபெயர்ந்தனர். காலனியாதிக்கம் முடிந்து தென்னாபிரிக்கா சுதந்திரம் பெற்றாலும் அந்த நாட்டின் அதிகாரம் நாட்டின் மக்கள் தொகையில் 15% மட்டுமே இருந்த வெள்ளையர்களிடம் சென்றது.
காலனியாதிக்கத்தின் காலத்தில் உலகம் முழுவதும் சென்ற பிரித்தானியர் தங்கள் நாட்டில் பிறந்த கிரிக்கெட் விளையாட்டையும் தங்களுடன் கொண்டு சென்றனர். இதனால் குறுகிய காலத்தில் பிரிட்டன் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் கிரிக்கெட் முக்கிய விளையாட்டாக மாறியது. இதற்கு தென்னாப்பிரிக்காவும் தப்பவில்லை. 1889-ம் ஆண்டே தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டு இங்கிலாந்து அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது.
19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா மாறியது. 1906-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. அதன் பின்னர் வந்த ஆண்டுகளில் கிரிக்கெட்டின் முக்கிய நாடாக தென்னாபிரிக்கா திகழ்ந்தது. எனினும் 1998 வரை, அதாவது சுமார் 100 ஆண்டுகள் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் கூட அந்த நாட்டுக்காக விளையாட முடியாத அளவு இனவெறி உச்சத்தில் இருந்தது.
தென்னாப்பிரிக்கா சுதந்திரம் பெற்ற பின்னரும் அந்த நாட்டில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குறை அதிகரித்த காரணத்தால் 1970-ம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஐசிசி அமைப்பு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து நெல்சன் மண்டேலா உள்ளிட்ட ஏராளமானோரின் போராட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் நிற வெறி தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்து நிலையில், 1991-ம் ஆண்டு மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்கு ஐசிசி அனுமதி வழங்கியது.
எனினும் அந்த நாட்டு தேசிய அணியில் ஒரு கறுப்பின வீரர் 1998-ம் ஆண்டே விளையாட முடிந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான மக்காயா நிதினியே தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணியில் கறுப்பினத்த வீரர்கள் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் சொந்த அணி வீரர்களாலேயே மோசமான நடத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணியில் கறுப்பினத்தவர்கள் கட்டாயம் பங்கேற்கவேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கு வெள்ளையின கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2007-ம் ஆண்டு இடஒதுக்கீடு நீக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தல் காரணமாக 2016-ம் ஆண்டு மீண்டும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதன்படி 15 வீரர்களில் 6 வெள்ளையர் அல்லாத வீரர்கள் அணியில் இருக்க வேண்டும், அதில் இரண்டு வீரர்கள் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறவேண்டும் என்ற நடைமுறை தற்போது தென்னாபிரிக்க அணியில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்கா காலடி எடுத்துவைத்தாலும், உலகின் சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தாலும் ஐசிசி உலகக்கோப்பை மட்டும் அந்த அணிக்கு எட்டா கனியாக உள்ளது. அதிகபட்சம் 1998-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மட்டுமே அந்த அணி வென்றுள்ளது.
அது எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றிபெறும் நிலையில் இருந்து தோல்வியை தழுவும் சோக்கர் அணியாக தென்னாபிரிக்க அணி கிண்டல் செய்யப்பட்டு வந்தது. 1999 உலகக்கோப்பையில் இருந்து கடைசியாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இந்த நிலையே தொடர்ந்தது.
இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் கறுப்பினத்தை சேர்ந்த டெம்பா பவுமா தென்னாபிரிக்கா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் 100 ஆண்டுகள் கடந்த தென்னாபிரிக்கா அணியின் முதல் கறுப்பின தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணி கடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில், இறுதி கட்டத்தில் சொதப்பி இந்திய அணியுடன் தோல்வியைத் தழுவியது. எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெம்பா பவுமா தலைமையில் தோல்வியே சந்திக்காமல், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
எனினும் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியை சந்திக்கும் என்றே விமர்சனம் எழுந்தது. அதற்கு ஏற்ப முதல் இன்னிங்சில் 212 ரன்கள் குவிக்க, தென்னாபிரிக்க அணியோ வெறும் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 73க்கு 7 விக்கெட்டை இழந்த நிலையில், வழக்கம் போல தென்னாபிரிக்கா அணி மோசமாக செயல்பட ஆஸ்திரேலிய அணி இறுதியில் 207 ரன்கள் குவித்தது. இதனால் தென்னாபிரிக்க அணி வெற்றிக்கு 282 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 70 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டை இழந்த நிலையில், ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களம் இறங்கிய கேப்டன் டெம்பா பவுமா, தொடக்க வீரர் ஐடென் மார்க்ரமுடன் இணைந்து நூறாண்டு பேசும் ஒரு சிறப்பான ஆட்டத்தை ஆடி தென்னாபிரிக்க அணிக்கு முதல் ஐசிசி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அவர் கிரிக்கெட்டில் அறிமுகமாகும்போதே அவரின் உருவம் குறித்த கேலி, கிண்டலுக்கு ஆளானார். மேலும் இடஒதுக்கீடு காரணமாக பவுமா அணியில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. அதையெல்லாம் மீறி தற்போது தென்னாபிரிக்க அணிக்கு முதல் உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்து தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது ஜாம்பவான்கள் என்று சொல்லப்பட்ட ஏராளமான வெள்ளையின கிரிக்கெட் வீரர்களால் முடியாத ஐசிசி கோப்பையை முதல்முறையாக ஒரு கறுப்பின வீரர் தென்னாப்பிரிக்க அணிக்கு வென்று கொடுத்துள்ளார்.