வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முல்தான் நகரில் தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 823 குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணி சார்பில் ஹரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஒரே இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த சாதனையை செய்த இரண்டாவது இங்கிலாந்து ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கிரேம் ஃபோலர் (201) & மைக் கேட்டிங் (207) இருவரும் 1985 இல் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இப்படி ஒரு சாதனையை படைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இன்னும் 120 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக ஆடினால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.