விளையாட்டு

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கால்பந்து உலகம் பிலே, மாரடோனா, ரிவால்டோ, பிளாட்டினி, டி ஸ்டிபானோ என்ற பல ஜாம்பாவான்களை கண்டுள்ளது. அந்த வகையில், 21-ம் நூற்றாண்டில் ஜாம்பாவான்களாக திகழ்ந்தவர்கள் என்றால் அது அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியும், போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும்தான்.

இவர்களில் மெஸ்ஸி சிறிய வயதில் வளர்ச்சி குறைபாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்குள் இருந்த கால்பந்து அரக்கனை கண்டுகொண்டு அவரை தங்களின் இளையோர் அகாடமியான "லா மசியா" வுக்கு ஒப்பந்தம் செய்தது உலகின் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா.

அப்போதில் இருந்து மெஸ்ஸிக்கு ஏறுமுகம்தான். உலகின் மிகசிறந்த இளையோர் அகாடமியான "லா மசியா" பல நட்சத்திர வீரர்களை உலகுக்கு அளித்துள்ளது. ஸ்பெயின் முதல்முறை உலகக்கோப்பை வெல்ல உதவிய சாவி, இனியெஸ்டா, புயோல், பீகே, புஸ்கெட், பாப்ரிகாஸ், பெட்ரோ போன்ற வீரர்கள் "லா மசியா" அகாடெமியில் உருவான வீரர்கள்தான்.

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

இது தவிர, தற்போது கால்பந்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் ஓல்மா, ஒனானா, இக்கார்டி, அன்சு ஃபாட்டி, லாமின் யாமால் போன்ற வீரர்களும் "லா மசியா" தயாரிப்புதான். இப்படி பல நட்சத்திரங்களை உருவாக்கிய "லா மசியா" அகாடெமியில் விளையாடிய மெஸ்ஸி அங்கு அனைவரையும் கவர, தனது 17 வயதிலேயே அவருக்கு பார்சிலோனா சீனியர் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தனது முதல் போட்டியிலே கோல் அடித்த மெஸ்ஸியின் கால்கள், அதன்பின் தற்போது வரை தனது ஓய்வை நிறுத்தவில்லை. மெஸ்ஸியுடன் பார்சிலோனா அணியில், அப்போது கால்பந்து நட்சத்திரமாக ஜொலித்த பிரேசில் வீரர் ரொனால்டினோவும் இடம்பெற்றிருந்தார். மாய கால்களுக்கு சொந்தமான இந்த இருவரில் ஒருவர் அணியில் இருந்தாலே எதிரணியின் பாடு திண்டாட்டம் என்ற நிலையில், இருவரும் சேர்ந்தால் எப்படி இருந்திருக்கும்.

சுமார் 3 ஆண்டுகள் இருவரும் பார்சிலோனா அணியில் இருந்து அணிக்கு இரண்டு லா லிகா கோப்பை மற்றும், ஒரு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளனர். மெஸ்ஸியின் வளர்ச்சிக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்தவர் ரொனால்டினோ என மெஸ்ஸி பல முறை கூறியுள்ளார். மெஸ்ஸி தனது ஆசான் என ஏற்றுக்கொண்டதும் ரொனால்டினோவைதான். இப்போதும் மெஸ்ஸியிடம் ரொனால்டோவின் பல வித்தைகளை பார்க்கலாம். அந்த அளவு இருவருக்கும் ஒரு பந்தம் உருவானது.

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

அதே நேரம் ரொனால்டினோவின் செயல்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையில், அவரை பார்சிலோனா கிளப் விடுவித்தது. இந்த காலத்தில் பார்சிலோனா கிளப்பின் சூப்பர் ஸ்டாராக மெஸ்ஸி மாறியிருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் கோல் அடித்து கிளப்காக கோப்பையை வெல்பவராக உருவாகினார். அதன் உச்சமாக 2009-ம் ஆண்டு கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பாலன் டி ஓர்' விருதை வென்று மெஸ்ஸி அசத்தினார். அந்த ஆண்டில் லா லீகா கோப்பை, சாம்பியன்ஸ் லீக், அர்ஜென்டினா அணிக்காக ஒலிம்பிக் தங்கம் என்று அசத்தியிருந்தார். இதன் காரணமாக உலக அளவில் மெஸ்ஸிக்கு என்று ரசிகர்கள் உருவாகினர்.

இந்த காலத்தில் பார்சிலோனா அணியின் பரம போட்டியாளரான ரியல் மாட்ரிட் கிளப்பில் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ இணைய, அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்த இருவருக்கும் இடையே யார் சிறந்தவர் என்ற மோதல் நடந்துகொண்டிருந்தது. ஆண்டு ஆண்டு காலமாக பார்சிலோனா vs ரியல் மாட்ரிட் மோதும் போட்டி 'எல் கிளாசிகோ' என்று அழைக்கப்படும். இந்த போட்டிக்கு வரலாற்று ரீதியிலான சிறப்புகளும் உண்டு. ஆகவே இது கால்பந்து அரங்கில் புகழ் பெற்ற மோதலாக இருந்தது. அத்தகைய புகழ்பெற்ற இந்த இரு அணிகளின் மோதலில் இரு சூப்பர் ஸ்டார்களான மெஸ்ஸி - ரொனால்டோவும் இணைய 'எல் கிளாசிகோ' போட்டி உலக அளவில் பேசப்படும் பரபரப்பான போட்டியாக மாறியது.

மெஸ்ஸியின் கால்பந்து அரங்கில் அவரின் உச்ச பட்ச ஆண்டாக அமைந்த ஆண்டு எது என்றால் அது 2012-ம் ஆண்டுதான். அந்த ஆண்டில் மட்டும் கிளப் மற்றும் தேசிய அணிக்காக 91 கோல்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிகபட்ச கோல் அடித்த வீரர் என்னும் சாதனையை இதன் மூலம் மெஸ்ஸி படைத்தார். இந்த சாதனையை இப்போது வரை யாரும் நெருங்ககூட முடியவில்லை.

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

பார்சிலோனா அணி மற்றும் மெஸ்ஸி இடையேயான பந்தம் என்பது தனி காவியமாக விரியக்கூடியது. அந்த அளவு மெஸ்ஸி என்றால் பார்சிலோனா, பார்சிலோனா என்றால் மெஸ்ஸி என்று பேசப்பட்டது. 17 ஆண்டுகள் பார்சிலோனா கிளப்பில் ஆடிய மெஸ்ஸி அந்த அணிக்காக மொத்தம் 34 கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளார். இதுவும் ஒரு சாதனையாக அமைந்தது.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கு விடை கொடுத்தார். அதற்கான அறிவிப்பு வெளிவந்த போது மெஸ்ஸி உணர்ச்சிவசப்பட்டு அழுத காட்சி உலகையே உலுக்கியது. அந்த அளவுக்கு அந்த கிளப்போடு மெஸ்ஸியின் பந்தம் அமைந்திருந்தது. பார்சிலோனா கிளப்க்கு பிறகு பிரான்சின் 'பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்' அணிக்கு 2 ஆண்டுகள் ஆடிய மெஸ்ஸி, அங்கும் கோப்பைகளை வென்று அசத்தினார். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் முதல் ஆண்டு மெஸ்ஸிக்கு சரியாக அமையாவிட்டாலும், இரண்டாவது ஆண்டில் அங்கும் தனது முத்திரையை படைத்தார்.

மெஸ்ஸி பார்சிலோனா அணியில் ஆடிய காலத்தில் அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை மெஸ்ஸி படைத்தாலும், அவரின் தேசிய அணியான அர்ஜென்டினா அணிக்காக எந்தவொரு கோப்பையும் வென்று கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இளம் வயதில் அர்ஜென்டினா அணிக்காக அண்டர் -20 உலகக்கோப்பை மற்றும் ஒலிம்பிக் தங்கம் ஆகியவற்றை வென்றாலும், சீனியர் அணிக்காக கோப்பையை வெல்ல முடியாத நிலை இருந்தது.

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

அதன் உச்சமாக 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி வரை வந்தும், இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வியைத் தழுவியது அர்ஜென்டினா அணி. மேலும், தென்னமெரிக்க அணிகளுக்காக கோபா அமெரிக்கா தொடரிலும் இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியைத் தழுவினார் மெஸ்ஸி. இதன் காரணமாக மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காகதான் அனைத்தையும் செய்வார், அர்ஜென்டினா அணிக்காக ஏதும் செய்யமாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. மெஸ்ஸி கூட இந்த காலத்தில் விரக்தியடைந்து ஓய்வை அறிவிப்பதாகவும் கூறினார். ஆனால், ரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப அந்த முடிவை திரும்பப்பெற்றார்.

இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு மெஸ்ஸிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டு கோபா அமெரிக்கா தொடரில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதோடு நிற்காமல் ஐரோப்பிய சாம்பியனான இத்தாலி அணியை வீழ்த்தி பைனலிசிமா கோப்பையையும் வென்றது.

இதன் காரணமாக அந்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக அர்ஜென்டினா உருவெடுத்தது. ஆனால் உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே அர்ஜென்டினா தோல்வியை தழுவியது. அந்த தோல்வியில் இருந்து வெகுண்டெழுந்த அர்ஜென்டினா அடுத்தடுத்து போட்டிகளில் பெரிய வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. மெஸ்ஸிக்காக கோப்பையை வெல்வோம் என களமிறங்கிய அர்ஜென்டினா வீரர்கள் அதனை செய்தும் காட்டினர்.

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

தனிப்பட்ட முறையிலும் இந்த தொடரிலும் ருத்ரதாண்டவம் ஆடினார். நாக் அவுட் போட்டிகள் அனைத்திலும் கோல் அடித்து புதுவித உலக சாதனையையும் படைத்தார். அதோடு, இந்த தொடரில் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை வென்றதோடு, தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தையும், அதிக அஸ்சிஸ்ட் கொடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தினார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதுக்கு மெஸ்ஸி பரிந்துரை செய்யப்பட்டார். கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை மெஸ்ஸி இதற்கு முன்னர் 7- முறை வென்றுள்ளார். இந்த விருது கால்பந்து பயிற்சியாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் செலுத்தும் வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த விருது இந்த முறையும் மெஸ்ஸிக்குதான் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், பாரிஸில் நடைபெற்ற விழாவில், 8-வது முறையாக 'பாலன் டி ஓர்' விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த விருதை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் யாரும் நெருங்க முடியாத முதலிடத்தில் தொடருகிறார். மெஸ்ஸியின் சக போட்டியாளரான ரொனால்டோ 5 முறை 'பாலன் டி ஓர்' விருதை வென்று இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில இருக்கிறார்.

3 தலைமுறைகளாக தொடரும் ஆதிக்கம்: கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராக பரிணமித்த மெஸ்ஸியின் கால்பந்து பயணம்!

இந்த இருவரை தவிர வேறு யாரும் 3 முறைக்கு மேல் இந்த விருதை வென்றதில்லை என்ற வகையில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகியோர் சிறந்த கால்பந்து வீரர்கள் வரிசையில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளனர். அதிலும் மெஸ்லி இந்த விருதை தனக்கு முந்தைய தலைமுறை வீரர்களான காகா, ரொனால்டினோ, ஹென்றி, ஈட்டோ, ரூனி, இப்ராஹிமோவிச், ரிபரி ஆகியோர் இருக்கும் போதே வென்றார்.

அதே போல சமகாலத்து சிறந்த வீரர்களான ரொனால்டோ, சேவி, இனியஸ்டா, சுவாரஸ், பென்சிமா, நெய்மார், லெவண்டோவ்ஸ்கி ஆகியோர் இருக்கும் போதும் இந்த விருதை வென்றார். தற்போது அடுத்த தலைமுறை வீரர்களான எம்பாப்பே, ஹாலண்ட், டி பிரையன், வினிசியஸ் ஜூனியர், ரோட்ரி ஆகியோர் காலத்திலும் இந்த விருதை வென்றுள்ளார். இவ்வாறு மூன்று தலைமுறைக்குமான சிறந்த வீரராக மெஸ்ஸி பரிணமித்துள்ளார். அவரின் கூற்றுப்படி கால்பந்தில் அனைத்தையும் மெஸ்ஸி சாதித்து, வென்றுள்ளார். இதன் காரணமாக தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரராக மட்டுமின்றி, கால்பந்து வரலாற்றின் சிறந்த வீரராகவும் மெஸ்ஸி மாறியுள்ளார்.

Related Stories

Related Stories