விளையாட்டு

INDvsPAK : மதவாத கோஷம்.. விளையாட்டிலும் குஜராத் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !

INDvsPAK : மதவாத கோஷம்.. விளையாட்டிலும் குஜராத் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஜனவரி 31, 1999. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகவும் பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டி அதன் இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்தியாவுக்கு வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டன.

இந்தியாவின் நம்பிக்கை நாயகனான சச்சின், தனது முதுகு வலியோடு 136 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அனைவரும் இந்தியாதான் இந்த போட்டியை வெல்லும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, சக்லைன் முஷ்டாக் பந்துவீச்சில் சச்சின், வாசிம் அக்ரமிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து இரண்டு ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா தனது அடுத்த இரண்டு விக்கெட்டுகளையும் இழக்க, பாகிஸ்தான் 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. அந்த கணத்தில் சென்னை மைதானமே நிசப்தமானது. ஆனால் இது எல்லாம் சிறிது நேரம்தான். இந்தியா தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்த ரசிகர்கள் அடுத்த கணமே சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்கத் தொடங்கினர்.

மைதானம் முழுக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கரகோசங்கள் எழுந்தது. இந்தியாவுக்குள் தங்களுக்கு இந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள், சென்னை ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்து மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களின் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டனர். அப்போது வர்ணனையில் இருந்த வர்ணனையாளர்களும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டி தள்ளியிருந்தனர்.

அதற்கு முன்னதாக மே 21, 1997, பெப்சி கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் இந்திய பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்துக்கொண்டிருந்தார்.

மறுமுனையில் ரமீஸ் ராஜா, இஜாஸ் அகமது, இன்சமாம் ஆகியோர் ஒத்துழைக்க, சதத்தை கடந்த சயீத் அன்வர், 150 ரன்களையும் கடந்து சென்றார். ஒரு கட்டத்தில் 190 ரன்களை அவர் எட்டியபோது மைதானத்தில் பெரும் பரபரப்பு தொற்றி கொண்டது. ஏனெனில் அதுவரை எந்த ஒரு வீரரும் 200 ரன்களை குவித்ததில்லை. இதனால் அவர் இரட்டை சதமடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆர்வமோடு காத்திருந்து அவரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தனர்.

INDvsPAK : மதவாத கோஷம்.. விளையாட்டிலும் குஜராத் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !

ஆனால், 196 ரன்கள் குவித்திருந்தபோது சச்சினின் பந்துவீச்சில் சயீத் அன்வர் ஆட்டமிழந்தார். எதிரணி வீரர், அதுவும் பாகிஸ்தான் அணி வீரர் என்றுதானே சிந்திக்காமல் மைதானமே எழுந்துநின்று அன்வரின் அந்த அற்புத ஆட்டத்தை தலைவணங்கியது. தனது சொந்த நாட்டில் கூட தனக்கு இத்தனை ஆதரவு கிடைத்ததில்லை என அன்வரே அந்த தருணம் குறித்து பெருமையோடு குறிப்பிட்டிருப்பார்.

இது எல்லாம் 90-களில் நடந்தது. மிக சமீக காலத்துக்கு வருவோம்.. அக்டோபர் 5, 2023, உலகக்கோப்பையில் இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் இந்தியா ஆடிய முதல் ஓவரில் ஸ்டார்க் பந்துவீச்சில் ரன் கணக்கையே தொடங்காமல் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்

ஹாசில்வுட் வீசிய அடுத்த ஓவரில், ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த ஓவரை வீசி விட்டு ஹாசில்வுட் Third Man திசையில் ஃபீல்டிங் செய்ய செல்ல, அந்த பக்கம் இருந்த சென்னை ரசிகர்கள் ஹாசில்வுட்டை பாராட்டி அவருக்கு Cheer செய்தனர்... நமது அணியை சிதைத்த எதிரணி வீரர் என்று எண்ணாமல் அவரின் அபார பந்துவீச்சை ரசித்து அவரை பாராட்டினர்..

INDvsPAK : மதவாத கோஷம்.. விளையாட்டிலும் குஜராத் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !

இப்போது அப்படியே அக்டோபர் 14, 2023-ல் (நேற்று) நடந்த ஆட்டத்துக்கு வருவோம். குஜராத் மாநிலம் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பையில் சந்திக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்றது பாகிஸ்தான் அணி. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமிடம் மைக்கை வர்ணனையாளர் கொண்டுசெல்ல, மைதானமே 'ஊ' என்று கோஷமிட்டு கிண்டல் செய்தது.

அதன்பின்னர் போட்டி நடைபெற்றுகொண்டிருந்தபோது ஆங்காங்கே சிலர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என பாகிஸ்தான் வீரர்களை சீண்டும் வகையில் மத ரீதியிலான கோஷமிட்டு கொண்டிருந்தனர். இதனை தடுக்க வேண்டிய நிர்வாகமோ இடைவேளையில் 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடலை ஒலிக்கவிட்டு அமைதியாக இருந்த ரசிகர்களை கூட, கோஷமிட தூண்டும் செயலை செய்தது.

இத்தனைக்கும் இந்த தொடரை நடத்துவது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஆனால், இந்த தொடர் பிசிசிஐ நடத்தும் தொடரைவிட மோசமான வகையில் நடந்து கொண்டிருக்கிறது. இதன் உச்சமாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்து வீரர்களின் ஓய்வறை நோக்கி செல்லும்போது, அங்கிருந்த ரசிகர் கூட்டம் அவரை நோக்கி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்தியது. அங்கு 'வந்தே மாதரம்' என்றோ 'இந்தியா' என்றோ கத்தியிருத்தால் கூட அதை சாக்குபோக்கு சொல்லி ஏற்றுக்கொள்ளலாம்,.

ஆனால், அங்கு ஒலித்தது வெறும் மதவாத கோஷம் மட்டுமே. விளையாட்டின் அழகு என்பதே அதன் மீதான ரசனைதான். ஆனால், அந்த ரசனை 1% கூட இல்லாதவர்கள்தான் அந்த மோடி மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் என்பது இதன்மூலம் வெளிப்படையாக தெரிந்து விட்டது. கிரிக்கெட் இந்தியாவை உலகளவில் தலை நிமிர வைத்துள்ளது. ஆனால், இந்த போட்டியில் 1 லட்சத்துக்கும் அதிகமான மத வெறியர்களால் இந்தியாவுக்கு தலைகுனிவு நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இங்கிருக்கும் மதவெறியர்களுக்கு இது மிகவும் உற்சாகமான தேச பக்தியாக தெரிந்திருக்கலாம். ஆனால், இவர்கள் சொல்லும் அந்த தேச பக்தியை இந்திய அணியில் இருக்கும் சிராஜ், ஷமி கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை. அரசியலில் மதம் கலந்து நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கிறது என்றால் தற்போது விளையாட்டில் மதம் கலந்து நாடு சீரழிந்துள்ளதை உலகமே கண்டுகொண்டிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

அரசியல் மட்டும் அல்ல, விளையாட்டிலும் தமிழ்நாட்டை பார்த்து மோடியின் குஜராத் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.

-லா.பிரவின் ஜோஸ்வா

Related Stories

Related Stories