விளையாட்டு

"உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்".. புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர்!

சூர்யகுமார் யாதவ் உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் என தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் வெய்ன் பார்னெல் தெரிவித்துள்ளார்.

"உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்".. புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். கடந்த ஒரு வருடத்தில் ஷார்ட் ஃபார்மட் போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த வீரராக அவரே விளங்கி வருகிறார். ஒரு ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சமீபத்தில் உடைத்திருக்கிறார் சூர்யா.

இந்த ஆண்டு 21 போட்டிகளில் அவர் 732 ரன்கள் குவித்திருக்கிறார். ஸ்டிரைக் ரேட் 180.29! இத்தனைக்கும் இந்த ஆண்டில் இன்னும் 3 மாதங்கள் மீதமிருக்கின்றன. ஒரு உலகக் கோப்பை வேறு வரவிருக்கிறது. இதற்கு முன்பு 2018ம் ஆண்டு 17 போட்டிகளில் ஷிகர் தவான் 689 ரன்கள் (ஸ்டிரைக் ரேட் 147) எடுத்திருந்ததே இந்தியர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது. 2016ம் ஆண்டு 13 இன்னிங்ஸ்களில் ஆடிய விராட் கோலி 641 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவருடைய ஸ்டிரைக் ரேட் 140 ஆகத்தான் இருந்திருந்தது.

"உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்".. புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 போட்டியில் இரண்டு அணியின் பேட்ஸ்மேன்களுமே மிகவும் தடுமாறினர். திருவனந்தபுரம் மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகவும் ஒத்துழைத்ததால் பேட்டிங் செய்தது மிகவும் கடினமாக இருந்தது. 20 ஓவர்களில் வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்கா. அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினர். இந்திய அணியும் பவர்பிளேவில் தங்களுடைய குறைவான ஸ்கோரைப் பதிவு செய்தது (17/1). ஆனால் இப்படிப்பட்ட ஒரு போட்டியிலும் கூட 33 பந்துகளில் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார் சூர்யா. இந்தப் போட்டியில் 3 சிக்ஸர்களும், 5 ஃபோர்களும் விளாசினார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது சர்வதேச டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் வெய்ன் பார்னெல், சூர்யகுமார் யாதவ் உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன்களுள் இருவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"உலகின் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்".. புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர்!

"தனிப்பட்ட முறையில், கடந்த சில மாதங்களாக நான் பார்த்ததை வைத்துக் கூறுகிறேன். தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களுள் சூர்யகுமார் யாதவும் ஒருவர். அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ஷாட்களை அடிக்கக்கூடியவர். ஒரு 360 டிகிரி பேட்ஸ்மேன். அப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராகப் பந்துவீசுவது எந்தவொரு பௌலருக்குமே சவாலான காரியம். இது முழுக்க முழுக்க அவருடைய உறுதியைப் பொறுத்தது தான் என்று நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு பந்தையும் அதற்கு ஏற்ப மட்டுமே எதிர்கொள்கிறார். அவரால் அழகான ஷாட்களும் ஆட முடியும். எங்களுக்கு எதிரான முதல் போட்டியின்போது அவர் அதி அற்புதமான சில ஷாட்களை ஆடினார் என்று நினைக்கிறேன்.

அது அவருக்கு மிகவும் அதிர்ஷ்டமான தினமாகவும் அமைந்தது. வேறொரு நாளில் அவருடைய சில ஷாட்கள் ஃபீல்டர்களின் கைகளில் விழுந்திருக்கும். சமீபமாக நான் பார்த்து ரசிக்கும் ஒருசில பேட்ஸ்மேன்களுள் அவரும் ஒருவர். அவர் மிகவும் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்" என்று சூர்யகுமார் யாதவைப் பாராட்டிப் பேசினார் வெய்ன் பார்னெல்.

banner

Related Stories

Related Stories