விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. இந்திய பெண்கள் அணியின் "லேடி சச்சின்" அறிவிப்பு!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. இந்திய பெண்கள் அணியின் "லேடி சச்சின்" அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் "லேடி சச்சின்" என்று புகழ் சூடப்படும் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். 17 வயது முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்த மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் உள்பட பல சாதனைகளை அரங்கேற்றியுள்ளார். வீராங்கனையாக தொடங்கி சக்ஸஸ்புள் கேப்டனாக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு மிதாலி ராஜின் கிரிக்கெட் பயண சாதனைகளை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டை சர்வதேச அளவில் தலைநிமிர செய்ததில் மிதாலி ராஜ் என்னும் மாய வீராங்கனையின் பங்கு மகத்தானது. தனது 14 வயது முதல் கிரிக்கெட்டில் பயணத்தை தொடங்கிய மிதாலி ராஜ், 14 வயதிலேயே ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம்பிடித்தார். ஆனால் அவரால் அப்போது இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.

1999ல் தனது 17 வயதில் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார் மிதாலி ராஜ்.

அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை சர்வதேச கிரிக்கெட்டை குறிப்பாக இந்திய அணியை உலக அளவில் திரும்பிப்பார்க்க வைப்பதற்கு இந்த வீராங்கனை தகுதியானவர் என்று. 2001ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் தடம் பதித்தார் மிதாலி ராஜ். 2002 இல் தனது 3வது சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 214 ரன்கள் குவித்து அப்போதைய வீராங்கனையின் சாதனையை முறியடித்தார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் ஒரு நாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீராங்கனை, இந்திய அணிக்காக 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை, தொடர்ந்து ஏழு அரை சதம் அடித்தவர், 200 போட்டிகளில் விளையாடிய முதல் சர்வதேச வீராங்கனை என்ற பல்வேறு அடுக்கடுக்கான சாதனைகளை அரங்கேற்றியுள்ளார் மிதாலி ராஜ்.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. இந்திய பெண்கள் அணியின் "லேடி சச்சின்" அறிவிப்பு!

1999ல் ஒருநாள் போட்டிகளில் பயணத்தைத் தொடங்கியிருந்த அவர், 2005ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக உருவெடுத்தார். 2005 முதல் 2017 வரை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளார் மிதாலி ராஜ்.

2019ல் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே ஆண்டில் 20 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்று மற்றொரு மகத்தான மகுடத்தையும் அலங்கரித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் மற்றும் ஐந்தாவது சர்வதேச வீராங்கனை, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெற்றியை தந்துள்ளவர் என பல சாதனைகளை தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் படைத்துள்ளார்.

வீராங்கனையாக மட்டுமில்லாமல் கேப்டனாக அணியை வழிநடத்திச் செல்வதிலும் தேர்ந்தவராக இருந்தார் மித்தாலி ராஜ். டி20 தொடரின் ஓய்வுக்குப் பிறகு ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு கவனம் செலுத்த இருப்பதாக கூறியதால் 2022 இல் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

தனது 17 வயது முதல் 39 வயது வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஓர் அங்கமாக திகழ்ந்த மித்தாலி ராஜ், 12 டெஸ்ட், 232 ஒருநாள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடி அனைத்து வகை போட்டிகளிலும் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் மிதாலி ராஜ் சாதனையை போற்றும் விதமாக 2003ல் அர்ஜூனா விருது, 2015ல் பத்மஸ்ரீ விருது, 2021ல் தயான் சந்த் கேல் ரத்னா விருது ஒன்றிய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. இந்திய பெண்கள் அணியின் "லேடி சச்சின்" அறிவிப்பு!

பல்வேறு மகத்தான சாதனைகளை சர்வதேச அரங்கில் படைத்த இந்த லேடி சச்சின் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணிக்காக தொடர இருப்பதாகவும் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். தன்னுடைய இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி எனவும், இந்திய அணிக்கு பல போட்டிகளில் கேப்டனாக இருந்தது சிறந்த தருணமாகவும், தனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

வீராங்கனையாக பயணத்தை தொடங்கி கேப்டனாக சாதனையை படைத்து, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் மிதாலி ராஜ் பங்கு என்பது அவசியமான ஒன்று. ஆடவர் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சும் அளவிற்கு வீரர்கள் சாதனை படைத்தாலும், சச்சின் சாம்ராஜ்யத்திற்கு என தனி வரலாறு உண்டு. அதே போல் இந்த லேடி சச்சினுக்கும் உண்டான தனி வரலாறு என்பது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடரும்.

banner

Related Stories

Related Stories