விளையாட்டு

கோலி கொடுத்த அதிரடி Comeback ஆட்டம்.. Playoff வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளுமா பெங்களூரு?

டூப்ளெஸ்சிஸ் அவுட் ஆன பிறகும் மேட்ச்சை மொத்தமாக பெங்களூரு பக்கமாக சாய்த்துவிட்டுதான் கோலி அவுட் ஆகியிருந்தார். இந்த சீசனில் கோலி ஆடிய முதல் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இதுதான்.

கோலி கொடுத்த அதிரடி Comeback ஆட்டம்.. Playoff வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளுமா பெங்களூரு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இந்த போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற சூழலில் வென்றிருக்கிறார்கள். பெங்களூருவை வெல்ல வைத்தது விராட் கோலி.

குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 168 ரன்களை எடுத்திருந்தது. பெங்களூரு அணி 19 ஓவர்களிலேயே வெற்றிகரமாக சேஸிங்கை முடித்திருந்தது. சேஸிங்கின் போது விராட் கோலி மட்டும் 54 பந்துகளில் 73 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 135. டூப்ளெஸ்சிஸூடன் சேர்ந்து 115 ரன்களை அடித்திருந்தார். டூப்ளெஸ்சிஸ் அவுட் ஆன பிறகும் மேட்ச்சை மொத்தமாக பெங்களூரு பக்கமாக சாய்த்துவிட்டுதான் கோலி அவுட் ஆகியிருந்தார். இந்த சீசனில் கோலி ஆடிய முதல் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் இதுதான்.

விராட் கோலி இந்த சீசனில் இதுவரை அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்கவில்லை.13 போட்டிகளில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைல் ரேட் 110 ஐ சுற்றித்தான் இருந்தது. மூன்று முறை முதல் பந்திலேயே டக் அவுட்டும் ஆகியிருந்தார். கோலியின் ஐ.பி.எல் கரியரில் அவர் இத்தனை மோசமாக ஆடியதே இல்லை. குஜராத்துக்கு எதிராக இதற்கு முன் ஆடிய போட்டியில் கோலி அரைசதம் அடித்திருப்பார். இந்த சீசனில் கோலியின் முதல் அரைசதம் அதுதான். ஆனால், அது சிறப்பான அரைசதமாக இல்லை. கோலியை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வரும் அரைசதமாகவும் இல்லை. கோலியின் ஃபார்ம் அவுட்டை ஹைலைட் செய்து காட்டும் இன்னிங்ஸாகத்தான் அது இருந்தது. 58 ரன்களை அடித்திருந்த கோலி அதற்காக 53 பந்துகளை எடுத்துக்கொண்டார். ஸ்ட்ரைக் ரேட் 109 தான். ரொம்பவே மந்தமான இன்னிங்ஸ் இது.

'கோலி கிரிக்கெட்டிலிருந்து சில காலம் ஒதுங்கியிருக்க வேண்டும். அவரிடம் இன்னும் 6-7 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது. ஓய்வே இன்றி ஆடி அதை கெடுத்துவிடக்கூடாது' என ரவிசாஸ்திரி அறிவுரை கூறியிருந்தனர். பெரும்பாலான முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் இந்த கருத்தை ஆமோதித்தனர்.

கடந்த சில போட்டிகளாக கோலி பயங்கர விரக்தியாக காணப்பட்டார். இந்த விரக்தி மனநிலை குறித்து வெளிப்படையாக பேசவும் செய்தார். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தார். 'நான் இப்போதும் மிகச்சிறப்பாக துல்லியமாக கவர் ட்ரைவ் ஆடுகிறேன். என்னால் ட்ரைவ் ஆட முடியாமல் போகும்போது நான் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிவிடுவேன்' என பேசியிருந்தார். கோலியின் கவர் ட்ரைவில் வெளிப்படும் துல்லியத்தன்மை அவரின் மன உறுதியிலும் வெளிப்பட்டிருந்தது.

வென்றே ஆக வேண்டிய போட்டியில் நேற்று பெங்களூரு சேஸிங்கை தொடங்கிய போது டூப்ளெஸ்சிஸூடன் கோலியே ஓப்பனராக வந்தார். சமீப வழக்கமாக அவரிடம் இருக்கும் விரக்தி இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இல்லை. முதல் பந்திலேயே மிக உற்சாகமாக மிட் ஆஃபில் தட்டிவிட்டு ரன்னே இல்லாத ஒரு பந்தில் குவிக் சிங்கிள் எடுத்து பாசிட்டிவ்வாக தொடங்கியிருந்தார். ஷமி வீசிய மூன்றாவது ஓவரில் பெரிய மூவ்மெண்ட் இல்லாமல் அவரின் தலைக்கு மேலேயே ஒரு பவுண்டரியை அடித்திருப்பார். இந்த ஷாட் அத்தனை நேர்த்தியாக ஷமியின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக இருந்தது. 'பௌலரின் தலைக்கு மேல் அடித்த அந்த ஷாட்தான் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான நம்பிக்கையை கொடுத்தது' என கோலியே Post Match Presentation இல் இந்த ஷாட்டை குறிப்பிட்டு பேசியிருப்பார். ஷமியை போன்றே அபாயகரமான ரஷீத்கானையும் தொடக்கத்திலேயே அட்டாக் செய்தார். ரஷீத்கான் பவர்ப்ளேயில் வீசிய முதல் ஓவரிலேயே அவரின் தலைக்கு மேலேயும் பவுண்டரியை அடித்தார்.

ரஷீத்கானின் பந்தில் சிக்சர் அடித்துதான் அரைசதத்தையும் நிறைவு செய்திருப்பார். ரஷீத்கானின் பந்தில் கடைசியாக அவுட் ஆகும் முன்பு கூட இறங்கி வந்து ஒரு சிக்சரை அவரின் தலைக்கு மேல் அடித்துவிட்டுதான் அவுட் ஆகியிருப்பார். இந்த மாதிரியான ஆதிக்கம்தான் கடந்த போட்டிகளில் கோலியிடம் மிஸ் ஆகியிருந்தது. இந்த போட்டியில் அதை தொடக்கத்திலிருந்தே நன்றாக வெளிக்காட்டி நல்ல இன்னிங்ஸை ஆடி முடித்தார்.

ஆட்டநாயகன் விருதும் கோலிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சீசனில் விரக்தியை மட்டுமே வெளிக்காட்டிக் கொண்டிருந்த கோலியின் முகம் முதல் முதலாக ஒரு திருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. நீண்ட நாள்கள் கழித்து கோலியை இப்படி பார்த்ததில் ரசிகர்களும் மகிழ்ச்சி!

banner

Related Stories

Related Stories