விளையாட்டு

புதிய கதாபாத்திரம்.. புதிய பாதை.. சர்ப்ரைஸாக கலக்கும் ஹர்திக் பாண்ட்யா!

குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யா அந்த அணியில் பேட்டிங்-பௌலிங் இரண்டிலுமே ஒரு புதிய கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு கலக்கி வருகிறார்.

புதிய கதாபாத்திரம்.. புதிய பாதை.. சர்ப்ரைஸாக கலக்கும் ஹர்திக் பாண்ட்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடப்பு ஐ.பி.எல் சீசனின் எதிர்பாராத சர்ப்ரைஸ்களுள் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் பெர்ஃபார்மென்ஸ்கள் அமைந்திருக்கிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யா அந்த அணியில் பேட்டிங்-பௌலிங் இரண்டிலுமே ஒரு புதிய கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு கலக்கி வருகிறார். ஹர்திக் பாண்ட்யா எப்படி சாதிக்கிறார்?

ஹர்திக் பாண்ட்யா, இந்திய அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர். குறிப்பாக, வேகப்பந்து வீசும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆல்ரவுண்டர்களில் ஒருவர். இதனால் ஹர்திக் பாண்ட்யாவிற்கு இந்திய அணியில் ரொம்பவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாண்ட்யாவும் ஒரு கட்டம் வரை அணியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தார். பேட்டிங்கில் ஃபினிஷராகவும் பௌலிங்கில் மிதவேகமாக மிடில் ஓவர்களில் வீசக்கூடியவராகவும் கணிசமான பங்களிப்பை அளித்து வந்தார். ஆனால், இதெல்லாம் ஒரு கட்டம் வரைக்கும்தான். ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சறுக்கல்கள் தொடங்கியது.

காயம் காரணமாக பந்து வீசவே முடியாத நிலைக்கு சென்றார். பேட்டிங்கிலும் ஃபார்ம் அவுட் ஆனார். இருந்தும் 2021 உலகக்கோப்பைக்கான அணியில் நம்பிக்கையோடு எடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்த நம்பிக்கையை ஹர்திக் பாண்ட்யாவால் காப்பாற்ற முடியவில்லை. இனியும் அவரை மட்டுமே நம்பியிருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட இந்திய அணி ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தில் வெங்கடேஷ் ஐயரை ஆட வைக்க தொடங்கியது.

கடந்த சில மாதங்களாக பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் காயத்திலிருந்து மீண்டு அடுத்தக்கட்ட பயிற்சிகளில் ஹர்திக் பாண்ட்யா கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் ஐ.பி.எல் இல் புதிதாக நுழைந்த குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் அணிக்கு கேப்டனாக ஒப்பந்தம் செய்தது.

ஐ.பி.எல் லும் தொடங்கியது. ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவாரா? பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்புவாரா? கேப்டனாக எப்படி செயல்படப்போகிறார்? என எக்கச்சக்க கேள்விகள் அவர் மீது வைக்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலடிகளை ஹர்திக் பாண்ட்யா கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கேப்டனாக அவர் தலைமை தாங்கும் குஜராத் அணி 5 போட்டிகளில் ஆடி 4 போட்டிகளில் வென்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலிலும் அந்த அணிதான் முதலிடம் வகிக்கிறது. முதலில் பேட்டிங் செய்தாலும் சரி டார்கெட்டை டிஃபண்ட் செய்தாலும் சரி குஜராத் அணி மிகச்சிறப்பாக போட்டிகளை வெல்கிறது. கேப்டனாக ஒரு சுமாரான அணியை ஹர்திக் பாண்ட்யா நன்றாக வழிநடத்தி வருகிறார்.

கேப்டன்சி சர்ப்ரைஸ் என்றால் பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரமும் அதை செயல்படுத்தும் விதமும் இன்னும் பெரிய சர்ப்ரைஸாக இருக்கிறது. குஜராத் அணியின் பேட்டிங் ஆர்டர் கொஞ்சம் வித்தியாசமானது. ஓப்பனிங்கில் மேத்யூ வேட், கில் நம்பர் 3 யில் விஜய் சங்கர் அல்லது சாய் சுதர்சன். இவர்களுக்கு பிறகு எல்லாமே அதிரடியாக ஃபினிஷர் ரோலில் ஆடக்கூடியவர்கள். ஹர்திக் பாண்ட்யா, அபினவ் மனோகர், ராகுல் திவேதியா என அத்தனை பேருமே அதிரடிக்காரர்கள். இதனால் நிலையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாத குறை அந்த அணிக்கு இருந்தது. அதை ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தீர்த்து வைத்திருக்கிறார். இதுநாள் வரை ஃபினிஷர் ரோலில் ஆடிவந்த ஹர்திக் பாண்ட்யா இந்த சீசனில் குஜராத் அணிக்காக நம்பர் 4 இல் இறங்கினார். இது அவருக்கு பழக்கவேப்படாத புதுமையான ஒரு ரோல். அதை ஏற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை ஆடி வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட 3 வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்தவர் கடைசி வரை நின்று 87 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்தார். சன்ரைசர்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில் கூட அரைசதம் அடித்து நாட் அவுட்டாக இருந்தார்.

பௌலிங்கிலும் ஹர்திக் பாண்ட்யா புதிய ரூட்டை பிடித்திருக்கிறார். வழக்கமாக மிடில் ஓவர்களில் மித வேகத்தில் வீசும் வழக்கத்தை கொண்டிருக்கும் ஹர்திக் இந்த சீசனில் பவர்ப்ளேயிலேயே வீசி வருகிறார். அதுவும் மித வேகத்தில் இல்லை. 140+ கி.மீ க்கும் அதிகமாக சீராக வீசி வருகிறார். விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார்.

அணியிலிருந்து ஒதுக்கப்பட்ட சமயத்தில் ஹர்திக் பாண்ட்யா தன்னையே மறுசீராய்வு செய்து கொண்டு புத்துணர்ச்சியுடன் மீண்டு வர வேண்டிய தேவை இருந்தது. ஹர்திக் மீண்டு வந்திருக்கிறார். ஆனால், யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய பாதையில் பயணிக்க தொடங்கியிருக்கிறார். இதுவும் வெற்றிகரமாக அமையட்டும்!

banner

Related Stories

Related Stories