விளையாட்டு

“செஸ் ஓர் அற்புதமான விளையாட்டு.. எப்படி தெரியுமா?” : முதல்வர் மு.க.ஸ்டாலின் ருசிகர பேச்சு!

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடக்க இருப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“செஸ் ஓர் அற்புதமான விளையாட்டு.. எப்படி தெரியுமா?” : முதல்வர் மு.க.ஸ்டாலின் ருசிகர பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

FIDE பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக இந்தியாவில், சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடக்க இருப்பது தொடர்பாக உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நான் இப்போது தமிழ்நாடு உலக அரங்கில் ஒரு மைல்கல்லாய் நிலைத்திருக்கப் போகின்ற ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்தச் செய்தி என்னவென்றால், 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்ற வாய்ப்பை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதம்.

விளையாட்டுப் போட்டிகள் என்றாலே ஆற்றல், திறமை, அழகு என நிறைய இருக்கும். அதிலும் செஸ் விளையாட்டுப் போட்டி என்றால், விளையாடுகிறவர்கள் நிதானத்தோடும், பார்க்கின்றவர்கள் படபடப்போடும் பங்கேற்கும் ஒரு அற்புதமான விளையாட்டு. இப்படிப்பட்ட அற்புதமான செஸ் விளையாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. உலகில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி இன்றைக்கு பிரக்யானந்தா வரையில் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது தமிழ்நாடு.

இந்த நிலையில், சுமார் 150-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பங்குபெற இருக்கும் செஸ் விளையாட்டுப் போட்டி, இதுவரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்துவித பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் மிகப்பெரியதாக அமைய உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய பன்னாட்டு செஸ் அமைப்பிற்கும், இந்திய செஸ் அமைப்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

விருந்தோம்பலுக்கும், பண்பாட்டிற்கும் பெயர் பெற்ற தமிழர்களுடைய பெருமையை உலகறியச் செய்வதற்கான ஒரு நிகழ்வாக இது நிச்சயம் அமையும். உலக செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக நடத்துவோம். உலக விளையாட்டு வீரர்களை இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories